சாத்தாங்காடு கனரக வாகன நிறுத்த திட்டத்துக்கு பொதுப்பணித்துறை நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல்

சாத்தாங்காடு இரும்பு அங்காடிக்கு அருகே கனரக வாகன நிறுத்தத் திட்டத்துக்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்பதலை பொதுப்பணித் துறை அளித்துள்ளது.
சாத்தாங்காடு கனரக வாகன நிறுத்த திட்டத்துக்கு பொதுப்பணித்துறை நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல்

சாத்தாங்காடு இரும்பு அங்காடிக்கு அருகே கனரக வாகன நிறுத்தத் திட்டத்துக்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்பதலை பொதுப்பணித் துறை அளித்துள்ளது.
சென்னை துறைமுகத்துக்கு உள்ளே செல்வதற்காக கனரக வாகனங்கள், சரக்குப் பெட்டக லாரிகள் முக்கிய சாலைகளின் ஓரங்களிலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் பல ஆண்டுகளாக விபத்துகள் ஏற்படுவது, போக்குவரத்து நெரிசல் ஆகிய பிரச்னைகள் உள்ளன.
ரூ.160 கோடியில்..: இதற்கு, தீர்வு காணும் வகையில் கனரக வாகனங்கள் முறையாக நின்று செல்ல கனரக வாகன நிறுத்த முனையம் ஏற்படுத்த அரசு ஆலோசித்தது. அவ்வகையில், சடையங்குப்பம், எர்ணாவூர், சாத்தாங்காடு இரும்பு அங்காடி வளாகம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக இடம் தேர்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், சில நடைமுறைச் சிக்கல்களால் தேர்வு செய்யப்பட்ட இடங்கள் அனைத்தும் கைவிடப்பட்டன. இந்நிலையில், சாத்தாங்காடு இரும்பு அங்காடிக்கு அருகிலுள்ள 66 ஏக்கர் சதுப்பு நிலப்பகுதியில், ரூ.160 கோடியில் வாகனம் நிறுத்தம் அமைக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.
சதுப்புநிலப் பகுதியில் சாத்தியமா? அதன்படி, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சதுப்புநிலப்பகுதியில் சில நடைமுறைச்சிக்கல் நிலவுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் வெள்ளநீர் தேங்குவதும், பூண்டி ஏரி உள்ளிட்ட பகுதியிலிருந்து அதிகளவில் உபரி நீர் வெளியேறி, கடலுக்கு செல்லும் பாதையாகவும் இந்த நிலப்பகுதி இருந்து வருகிறது.
எனவே, இந்த இடத்தில் வாகன நிறுத்தம் அமைப்பது சற்று சவாலான விஷயமாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், கடந்த 2015-இல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மட்டும் 3 கோடி கனஅடி நீர் இந்த பகுதியில் வெளியேறியது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வகையில், மணலி, எண்ணூர், பர்மா நகர், மாத்தூர், வடகரை உள்பட பல வடசென்னைப் பகுதிகள் வெள்ள நீர் தேங்கும் பகுதிகளாக இருந்து வருகின்றன.
எனவே, சதுப்பு நிலப்பகுதியில் கனரக வாகன நிறுத்தம் அமைக்கப்படும் போது, வெளியேறும் உபரி நீர் தடையில்லாமல் செல்லும் வகையில் அமைக்கப்படுவது அவசியமாக உள்ளது. இதற்காக, பொதுப்பணித்துறை தற்போது நிபந்தனைகளுடன் கூடிய தடையிலாச் சான்றை வழங்கியுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: தொடர்ந்து துறைமுகப் பகுதியில் ஏற்படும் கன ரக வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் வாகன நிறுத்த முனையம் திட்டத்தை செயல்படுத்த சிஎம்டிஏ முனைந்துள்ளது. இதற்காக, பல்வேறு இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு கைவிடப்பட்டன. இதில், தற்போது சாத்தாங்காடு இரும்பு அங்காடிக்கு அருகேயுள்ள சதுப்பு நிலப்பகுதியில் அமைக்கலாம். ஆனால், அங்குள்ள நடைமுறைச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.
நிபந்தனையுடன் ஒப்புதல்: எனவே, உபரி நீர் வெளியேறும் சதுப்புநிலப் பகுதியில் கனரக வாகன நிறுத்தம் அமைக்கவேண்டுமெனில், அப்பகுதியில் 4.2 அடிக்கு மேல் உறுதியான கான்கிரீட் தளம் அமைத்திடல் வேண்டும். அதுபோல், திட்டத்தின் கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மைக்கு பொறுப்பேற்பதும், உரிய அனுமதியோடு திட்டத்தை தொடங்கவும் சிஎம்டிஏவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாசுகட்டுப்பாட்டு வாரிய நிபந்தனைப்படி, அப்பகுதியில் இருக்கும் குப்பை, கட்டடக்கழிவுகளை அகற்றுவதற்கும், உபரி நீர் வேகமாக வெளியேறுவதற்கான பாதைகளை ஏற்படுத்தும் வகையில் கன ரக வாகன நிறுத்த திட்டம் இருக்க வேண்டும் எனவும் அறுவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com