சிறு வணிகக் கடன் உச்சவரம்பு அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக் கடன் உச்சவரம்பு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சிறு வணிகக் கடன் உச்சவரம்பு அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகக் கடன் உச்சவரம்பு ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களுக்கான பட்டியல் இப்போது வழங்கப்படுவதில்லை. இதை சரிசெய்யவும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பொருள்கள் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் ரூ.40 கோடியில் விரல் ரேகை படிப்பி ('விரல் ரேகை ரீடர்') மற்றும் அச்சுப்பொறி அளிக்கப்படும்.
நபார்டு வங்கி உதவியுடன் தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு மைய வங்கியியல் கணினி சேவை முறை மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
கூட்டுறவுச் சங்கங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்ட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, நிகழ் ஆண்டில் 114 கூட்டுறவு நிறுவனங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும். மேலும், மதுரை விரகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வணிக வளாகம் கட்டப்படும்.
திருச்சி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் சார்பில் 15 புதிய கிளைகள் தொடங்கப்படும். 27 கூட்டுறவு நிறுவனங்கள் நவீனமயமாக்கப்படும்.
சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், சிறு வணிகக் கடன் உச்சவரம்பு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும். பொது விநியோகத் திட்டத்துக்கு வழங்கப்படும் பொருள்களை பாதுகாக்கும் சேமிப்புக் கிடங்குகளை அமைத்திடும் வகையில், மாதவரம் பகுதியில் 12 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்கு கட்டப்படும்.
மேலும், முதல் கட்டமாக 9 மாவட்டங்களில் 14 சொந்த இடங்களில் சூரிய ஒளி கூரை கொண்ட சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும்.
இணைய வழி நீர் தர கண்காணிப்பு: வனத் துறை பணியாற்றும் ஊழியர்கள் மோதல் சம்பவங்களால் உயிரிழக்க நேரிடுகிறது.
காவலர்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டுத் தொகைக்கு இணையாக வனப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி அளிக்கப்படும்.
வனப் பகுதியில் வாழ்ந்து வருகின்ற மக்களுடைய இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையை இப்போதைய சந்ததியினருக்கு குறிப்பாக மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு சூழல்சார் சுற்றுலாக் கொள்கை உருவாக்கப்படும்.
பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளின் வடிகால் கழிவுநீர் வெளியேற்றத்தால் ஆற்று நீரில் பாதிப்பு ஏற்படுகிறது.
ஆற்று நீரின் தன்மையை தொடர்ச்சியாக 24 மணி நேரமும் கண்காணிக்கும் நோக்கத்துடன் நிகழ் நிதியாண்டில் பவானி ஆற்றில் 2 இடங்களில் இணைய வழி தொடர் நீர் தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இந்த நிலையங்கள் தலைமை அலுவலகம் மற்றும் உரிய மாவட்ட அலுவலகங்களுடன் இணைய வழியாக இணைக்கப்படும் என்றார் முதல்வர் பழனிசாமி.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து திங்கள்கிழமை உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com