டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி திங்கள்கிழமை அறிவித்தார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி திங்கள்கிழமை அறிவித்தார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் தங்கமணி வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 26,679 சில்லறை விற்பனைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியமானது 2011-2016-ஆம் ஆண்டு வரை 6 ஆண்டுகளிலும் உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் முறையே ரூ.500, ரூ.400, ரூ.300 என உயர்த்தி வழங்கப்படும்.
இந்த ஊதிய உயர்வுகள் 2017 செப்டம்பர் முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதனால் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் 7,203 மேற்பார்வையாளர்களும், 15,744 விற்பனையாளர்களும், 3,732 உதவி விற்பனையாளர்களும் பயன்பெறுவர். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக ரூ.13.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரத்துக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
நீரா எடுக்க உரிமம்: தென்னை மரத்திலிருந்து நீராவைப் பிரித்தெடுத்து அதிலிருந்து வெல்லம், தேன், பிஸ்கெட்டுகள், சர்க்கரை போன்ற பிற பொருள்களைத் தயாரித்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்ய உரிமம் வழங்குவதற்கு ஏதுவாக 1937-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் மற்றும் உரிய விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பொருளாதார ரீதியாக மேம்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com