தமிழகத்தில் மதுக்கடைகள் மூடல்: புதுச்சேரிக்கு 30 சதவீதம் வருவாய் உயர்வு

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டதால், புதுச்சேரிக்கு மது விற்பனையால் வருவாய் 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டதால், புதுச்சேரிக்கு மது விற்பனையால் வருவாய் 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: தேர்தல் நேரத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அதிமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இப்போது படிப்படியாக அமல்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் முன், ஆலயங்கள் அருகே மதுக்கடைகள் உள்ளன. மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், புதிதாக மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். திருப்பூரில் ஒரு மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றார்.
அப்போது அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டுக் கூறியது: மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்துவோம் என்றுதான் கூறினோம். அதன்படி கடைகளை மூடி வருகிறோம். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன்படியும் கடைகளை மூடியுள்ளோம்.
சட்டத்தை மீறி கடைகளைத் திறக்கவில்லை. மதுக்கடைகளை ஒரே நாளில் மூடினால் கள்ளச்சாராயம் பெருகும். உயிரிழப்பும் அதிகரிக்கும். அதனால், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இப்போதே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவாலும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்காக மூடப்பட்ட கடைகளாலும் புதுச்சேரியில் மதுவிற்பனை மூலம் 30 சதவீதம் வருவாய் உயர்ந்துள்ளது.
திருப்பூரில் இடுகாட்டுக்கு அருகே மதுக்கடை அமைந்திருந்தது. அந்த இடத்தில் வீடுகள் இல்லை. சிலரின் தூண்டுதலின் பேரில் அந்த கடைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினரையும் அங்குள்ள சிலர் விடவில்லை. ஒரு மருத்துவமனைக்குச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தையும் விடுவிக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் அங்கு நடந்தது.
கடமை தவறி குற்றம் இழைந்திருந்தால்தான் காவல்துறை அதிகாரியின் பதவி உயர்வைத் தடுக்க முடியும். ஒரு சம்பவத்தைக் காரணம் காட்டி பதவி உயர்வு கொடுக்கக்கூடாது எனச் சொல்ல முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com