திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுகிறதா?: காங்கிரஸ் உறுப்பினரை மடக்கிய அமைச்சர் தங்கமணி

காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமாரை, திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுகிறதா என்று கேட்டு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி

காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமாரை, திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுகிறதா என்று கேட்டு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மடக்கினார்.
சட்டப்பேரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் பேசியது:
மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்தப் போவதாக அதிமுக அரசு கூறியது. ஆனால், இன்னும் நிறைவேற்றவில்லை. காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்றார்.
அப்போது அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டுக் கூறியது: காங்கிரஸ் உறுப்பினர் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்கிறார். அப்படியென்றால் தற்போதுள்ள கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுகிறதா என்பதை விளக்க வேண்டும் என்றார்.
எச்.வசந்தகுமார் (காங்கிரஸ்): அப்படிச் சொல்லவில்லை. காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம். அண்ணா முதல்வராக இருந்த காலம். ஒரு ரூபாய்க்குப் படி அரிசி திட்டம் கொண்டு வரவேண்டும் என்றால் மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறினர். ஆனால், மதுவால் வரும் பாவப் பணம் தேவையில்லை என அண்ணா கூறிவிட்டார்.
அமைச்சர் செங்கோட்டையன்: புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசை மதுவிலக்கை அமல்படுத்த வசந்தகுமார் கோரலாம்.
எச்.வசந்தகுமார்: தமிழகச் சட்டப்பேரவையில்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் இங்குதான் அமல்படுத்தக் கோர முடியும்.
செங்கோட்டையன்: புதுச்சேரியிலும் தமிழர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை உறுப்பினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எச்.வசந்தகுமார்: திருமணத்தின்போது தாலிக்கு 8 கிராம் தங்கம் அரசு தருகிறது. ஆனால், அதைக் குடிப்பதற்காக கணவர் பறித்து விடுவதாக பெண்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
ஆண்டுக்கு 1.31 லட்சம் பேர் மதுவின் பாதிப்பால் இறந்து போகின்றனர். அவர்களின் ஆவிகள் எல்லாம் பிள்ளை குட்டிகளைக் கவனிக்க முடியாமல் மதுவால் இறந்துவிட்டேனே என நம்மைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. சட்டப்பேரவைக்குள் அந்த ஆவிகள் வருவதில்லை.
செங்கோட்டையன்: உறுப்பினரைச் சுற்றிச்சுற்றி ஆவிகள் வரும் போலும்.
ராகுலுக்கு எதிர்காலம் இல்லை: காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார் ராகுல்காந்திக்கு அமைக்கப்பட்ட கட்-அவுட் குறித்து பேசியது: ராகுல்காந்தியின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டுகளை காவல்துறையினர் அகற்றி விடுகின்றனர். சில தலைவர்களுக்கு 10 நாள்களுக்கு மேல் வைக்கின்றனர். நாங்கள் ஒரே ஒரு நாள்தான் வைக்கிறோம். அதையும் எடுத்துவிடுன்றனர் என்றார்.
அமைச்சர் தங்கமணி: காவல்துறையிடம் முறையாக அனுமதி பெற்று வைத்தால், எடுக்க மாட்டார்கள்.
வசந்தகுமார்: காவல் துறையிடம் அனுமதி பெற்று முடிப்பதற்குள் ராகுல்காந்திக்கு அடுத்த பிறந்த நாளே வந்துவிடும்.
தங்கமணி: தமிழகத்தில் ராகுல்காந்திக்கு எதிர்காலமே இல்லை என்பதைத்தான் அப்படிச் சொல்கிறீர்களோ?.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com