திமுகவின் குறுந்தகட்டை ஆதாரமாக ஏற்க இயலாது: பேரவைத் தலைவர் அறிவிப்பு

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒளிபரப்பின் பிரதியை ஆதாரமாக ஏற்க முடியாது என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒளிபரப்பின் பிரதியை ஆதாரமாக ஏற்க முடியாது என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்தவுடன் திமுக உறுப்பினர்கள் ஒரு பிரச்னையை எழுப்பி வெளிநடப்புச் செய்தனர்.
இந்நிலையில், பேரவைத் தலைவர் பி.தனபால் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசியது:
திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றால் சட்டப் பேரவையில் அதுதொடர்பாக விவாதிக்க விதிகள் அல்லது மரபுகளின் கீழ் சாத்தியப்பட வேண்டும். என்ன பிரச்னை என்பது தொடர்பாக என்னிடம் கூறி முன்னரே அனுமதி பெறவில்லை. அவர்கள் எழுப்ப முயன்ற பிரச்னை நீதிமன்றப் பரிசீலனையில் உள்ளதாகும்.
நீதி விசாரணையில் இருக்கும் பொருளின் மீது கருத்தைச் சொல்லவோ அந்தப் பொருள் பற்றிக் குறிப்பிடவோ கூடாது என விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவை தொடங்கியது முதல் ஒரு பிரச்னையை திமுக தொடர்ந்து எழுப்பியது.
கடந்த 16-ஆம் தேதி தனது கையில் ஆதாரம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் என்னிடம் அளிக்க முயன்றார். எனது அறையில் வந்து தருமாறும் அதன்பின் அதனைப் பார்த்து உரிய பதிலை அளிப்பதாகவும் தெரிவித்தேன்.
அவர்கள் அளித்த குறுந்தகட்டை போட்டுப் பார்த்தேன். தொலைக்காட்சியில் வந்த ஒரு ஒளிபரப்பைப் பதிவு செய்து ஆதாரமாகக் கொடுத்துள்ளனர். மொத்தத்தில் ஊடகச் செய்திதான் அவர்கள் கொடுத்த ஆதாரம். ஊடகச் செய்தியை ஆதாரமாக வைத்து விவாதம் நடைபெறக் கூடாது என்பதற்கு ஏற்கெனவே தீர்ப்பு அளித்து விட்டேன். இதுபோன்ற நடைமுறைகள் திமுக ஆட்சிக் காலத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது. கடந்த 1998-ஆம் ஆண்டு மார்ச் 20, 2011 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆகிய தினங்களில் பேரவையில் நடைபெற்ற விவாதங்களின் போது பத்திரிகைச் செய்தியை ஆதாரமாகக் காட்டி அதனை அவையில் பதிவு செய்யக் கூடாது என ஆளும்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கருத்து அப்போதைய பேரவைத்தலைவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
சரியாக இருக்காது: தொலைக்காட்சியிலோ அல்லது பத்திரிகையிலோ ஒரு செய்தி அல்லது குற்றச்சாட்டு வந்துள்ளதை வைத்துக் கொண்டு விவாதித்தால் அது சரியாக இருக்காது. குறுந்தகட்டில் பேட்டி அளித்ததாகக் கூறப்படும் உறுப்பினர்களே தாங்கள் அவ்வாறு பேசவில்லை என்று தெரிவித்ததும் பத்திரிகைச் செய்தியாக வந்துள்ளது. இந்நிலையில், ஆதாரம் என எதிர்க்கட்சித் தலைவர் கொடுத்த குறுந்தகட்டில் உள்ள செய்தி ஆங்கிலத் தொலைக்காட்சியில் வந்த ஒரு ஒளிபரப்பின் பிரதி என்பதாலும், அதனை அடிப்படையாகக் கொண்டு இங்கே பேரவையில் விவாதிக்க பேரவை விதிகள், மரபுகள்படி ஏற்க முடியாத நிலை உள்ளதாலும் ஏற்கெனவே அளித்த தீர்ப்பை உறுதி செய்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆதாரமாக அளித்த குறுந்தகட்டுச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு அந்தப் பிரச்னையை இங்கே விவாதிக்க இயலாது. எனவே, இந்தப் பிரச்னை குறித்து இனிப் பேச வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com