திருச்சியில் புதிய தமிழகம் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை

திருச்சியில் புதிய தமிழகம் கட்சி பிரமுகர் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருச்சியில் புதிய தமிழகம் கட்சி பிரமுகர் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி தென்னூர் புதுமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாமுண்டி மகன் அண்ணாதுரை (55). பந்தல் போடும் தொழிலாளி. புதிய தமிழகம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தொண்டரணி செயலாளராகவும் இருந்து வந்தார்.
இவர், திங்கள்கிழமை காலை வேலைக்குச் செல்வதற்காக காந்தி மார்க்கெட் அருகே மேட்டு தெருவில் உள்ள டீ கடை அருகில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது, ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அண்ணாதுரை சாலைக்கு இழுத்து வந்து பயங்கர ஆயுதங்களால் வெட்டிவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றது. இதில், பலத்த காயமடைந்த அண்ணாதுரை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலறிந்து வந்த காந்திமார்க்கெட் போலீஸார் அண்ணாதுரையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அண்ணாதுரை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தை திருச்சி மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையர் பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து காந்திமார்க்கெட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணாதுரையின் மகன் பிரபாகரன் (24) கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி தில்லை நகர் பகுதியில் சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அண்ணாதுரை மட்டுமே கண்ணால் கண்ட சாட்சியாக இருந்தார்.
வழக்கு வரும் வாரம் விசாரணைக்கு வரும் நிலையில், தங்களுக்கு எதிராக சாட்சி சொல்லிவிடுவார் என்பதற்காக பிரபாகரனை கொன்றவர்கள்தான் அண்ணாதுரையையும் கொலை செய்திருப்பார்கள் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். அதே நேரத்தில், பிரபாகரனின் கொலை வழக்கில் தொடர்புடையவர்களையும் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com