பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது: எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) சட்ட மசோதா பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் திங்கள்கிழமை நிறைவேறியது.
பேரவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது: எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு

சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) சட்ட மசோதா பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் திங்கள்கிழமை நிறைவேறியது.
தமிழக சட்டப் பேரவையில் கடந்த 14 ஆம் தேதியன்று, ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்ட மசோதாவை வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிமுகம் செய்தார்.
இந்த மசோதா திங்கள்கிழமை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மசோதாவை அவை தெரிவுக் குழுவுக்கு அனுப்பி விவாதித்து அதன் பிறகு நிறைவேற்ற வேண்டும் என்கிற திமுகவின் கோரிக்கையை ஏற்க பேரவைத் தலைவர் பி.தனபால் அனுமதி மறுத்தார். இதையடுத்து, பேரவையில் இருந்து திமுக வெளிநடப்புச் செய்தது.
பேரவையில் அப்போது நடந்த விவாதம்:
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் (தி.மு.க.): ஜி.எஸ்.டி. சட்டம் தொடர்பாக மக்களிடம் உள்ள அச்சத்தைப் போக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். வாட் வரியை அமல்படுத்தும் நிலை வந்தபோது, தி.மு.க. ஆட்சியில் குழு அமைக்கப்பட்டு வணிகர்கள், வணிகப் பிரதிநிதிகள், தொழில் நடத்துனர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஊறுகாய், மசாலா பொருள்கள், பேனா, பென்சில், செங்கல் என பல்வேறு பொருட்களின் விலை ஏறி வர்த்தகம் பாதிக்கப்படும். எனவே, இதை வர்த்தகர்கள் மற்றும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உடனே அமல்படுத்தாமல் ஓராண்டு சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
விஜயதரணி (காங்கிரஸ்): வீடுகளில் பயன்படுத்தும் கிரைண்டர்களுக்கு வரி 5 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகவும், ஃபர்னிச்சர்களுக்கு 12 முதல் 28 சதவீதமாகவும், விவசாயிகள் பயன்படுத்தும் யூரியாவுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி.-இல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைத்தறி, கதர்துணிகளுக்கும் வரி அறிமுகப்படுத்துள்ளது. கதர், மெழுகுவர்த்தி தயாரிக்கப் பயன்படும் பாரபின் போன்றவற்றுக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்க வேண்டும். வரி கட்டத் தவறினால் சிறைத் தண்டனை என சட்டத்தில் உள்ளது. இதிலுள்ள சிக்கலான விஷயங்களைக் கையாளும்போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி தவறுகள் நேரும் போது சிறைத் தண்டனை பெற நேரிடும்.
எனவே, இதனை இரண்டு ஆண்டுகளுக்கு சோதனை அடிப்படையிலான திட்டமாகச் செயல்படுத்த வேண்டும். அதுவரை தவறிழைக்கும் வணிகர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
முகமது அபுபக்கர் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்): ஜி.எஸ்.டி. சட்டத்தால் ஒரு நபருக்கு ஆகும் செலவில் கூடுதலாக 20 சதவீதம் செலவீனம் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பரந்த நிலை ஆலோசனை ஒன்றை நடத்த வேண்டும். அதன் பின்னர் தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு பயிற்சியாக அந்தத் திட்டத்தை அமல்படுத்தி, தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
தெரிவுக் குழுவுக்கு அனுப்புக - எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: மசோதாவை நிறைவேற்றாமல் அதை தெரிவுக் குழுவுக்கு அனுப்பி, மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதுவரை இந்த மசோதவை தள்ளி வைக்க வேண்டும்.
நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார்: நாடு முழுவதும் ஒரே சீரான வரியை கொண்டு வருவதற்கான சட்டம் அது. ஆனால் மாநிலத்தின் சுயாட்சி, நிதிக்கான தன்னாட்சி ஆகிய இரண்டும் பாதிக்கப்படாத அளவுக்கு மத்திய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கருத்தை ஏற்ற பின்பு ஆதரவு அளிக்கப்பட்டது. பெட்ரோலியப் பொருள்கள், மது ஆகியவற்றின் மீது மாநில அரசே விலை நிர்ணயம் செய்ய முடியும்.
ஜி.எஸ்.டி. சட்டத்தால் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி விகிதம் ஒரு சதவீதம் அதிகரிக்கும். பலமுனை வரிகள், ஒரே நிலைப்பாட்டுக்கு வரும்.
வணிக வரிகள் அமைச்சர் கே.சி.வீரமணி: ஜி.எஸ்.டி., சட்டத்துக்கு 25 மாநில அரசுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. காங்கிரஸ் கொண்டு வந்தபோது இந்தச் சட்டத்தை, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடுமையாக எதிர்த்தார். தற்போது அதை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறார்.
இந்த சட்டம் பற்றிய கருத்துகள் அனைத்தும் கவுன்சில் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தப்படும். எனவே இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற அனைவரும் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
அதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தச் சட்ட மசோதாவை தெரிவுக் குழுவுக்கு அனுப்பி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அதை தெரிவுக் குழுவுக்கு அனுப்பாமல், குரல் வாக்கெடுப்பின் மூலம் அந்த மசோதாவை நிறைவேற்ற இருப்பதால் அதைக் கண்டித்து தி.மு.க. வெளிநடப்பு செய்கிறது என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பேரவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். ஆனால் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் வெளிநடப்பு செய்யவில்லை.
இந்த நிலையில் அமைச்சர் கே.சி.வீரமணியின் கோரிக்கையின்படி, தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்ட முன்வடிவை நிறைவேற்றும் வகையில் அதை குரல் வாக்கெடுப்பு நடத்த பேரவைத் தலைவர் பி.தனபால் அழைப்பு விடுத்தார்.
அதைத் தொடர்ந்து, அதிமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதா நிறைவேறியது.

பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் பெறலாம்


ஜி.எஸ்.டி. மசோதா நடைமுறையால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் பெறலாம் என்று நிதித் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் ஜி.எஸ்.டி., மசோதா தாக்கல் செய்யப்பட்டு திங்கள்கிழமை ஆய்வுக்கு எடுக்கப்பட்டது. அப்போது, ஜி.எஸ்.டி. கவுன்சில் குழு உறுப்பினரும், நிதியமைச்சருமான டி.ஜெயக்குமார் தெரிவித்த கருத்துகள்:
ஒவ்வொரு பொருளுக்கும் ஜி.எஸ்.டி. பிட்மேன் கமிட்டியே வரி நிர்ணயம் செய்கிறது. ஜி.எஸ்.டி.-க்கு முன்பாக வாட் வரி நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த வரிவிதிப்பின்படி, நுழைவு வரி, விற்பனை வரி, மேல்வரி என பலமுறை வரிகள் ஒரு பொருளுக்கு விதிக்கப்பட்டன.
பிற மாநிலத்தில் இருந்து ஒருபொருளை நமது மாநிலத்தில் விற்கும் போது, பல்வேறு விதிகள் விதிக்கப்படும். இனி ஒரே ஒரு வரி விதிப்பு மட்டுமே செய்யப்படும்.
ஜி.எஸ்.டி. குறித்து விவாதிக்க அமைக்கப்பட்ட கவுன்சில் இதோடு முடிந்து விடப் போவதில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தால் அமைக்கப்பட்ட இந்தக் கவுன்சிலானது தொடர்ந்து நடைபெறும். யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அதை கவுன்சிலில் எடுத்துச் சொல்லி நிவாரணம் பெற முடியும்.
கவுன்சிலுக்கு எடுத்துச் செல்லும் போது உரிய வகையில் அது பரிசீலிக்கப்படும். எனவே, வியாபாரிகள், வர்த்தகர்கள் அச்சப்படத் தேவையில்லை. நமது மாநில வியாபாரிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையிலான அம்சங்கள் உள்ளன.
எனவே, நமது வியாபாரிகளின் நலன்களைக் காக்க உரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி நமது நலன்களைக் காத்திட முடியும் என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com