மின்சார நண்பன் திட்டத்துக்கு 1.60 கோடி பேர் பதிவு

மின்சார நண்பன் திட்டத்தில் 1.60 கோடி நுகர்வோரின் செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
மின்சார நண்பன் திட்டத்துக்கு 1.60 கோடி பேர் பதிவு

மின்சார நண்பன் திட்டத்தில் 1.60 கோடி நுகர்வோரின் செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.
சட்டப்பேரவையில் மின்சாரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் தங்கமணி திங்கள்கிழமை பேசியது:
மின்சாரத்தால் ஆட்சியை இழக்கிறோம் என்று புலம்பியவர்களுக்கு மத்தியில், உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு, மின் பாதை அமைத்துத் தாருங்கள் என்று பிரதமருக்கு கடிதம் எழுதும் அளவுக்கு மின்சார உற்பத்தியில் உபரி நிலைக்கு தமிழகத்தை உயர்த்தி உள்ளோம்.
2011-இல் முதல் 6 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்துக்கு 10,496 மெகாவாட் மின்சாரத்தை மின்கட்டமைப்பில் இணைத்து, இனி தமிழகத்தில் எப்போதும் மின்வெட்டே இல்லை என்ற நிலைமையை உருவாக்கியுள்ளோம்.
மாநிலத்தின் சராசரி மின்தேவை என்பது, 13,750 மெகாவாட்டிலிருந்து, 14,250 மெகாவாட்டாக உள்ளது. அதேபோல, 2016 ஏப்ரல் 29-இல் தமிழகத்தின் உச்சகட்ட மின் தேவையான 15,343 மெகாவாட் அளவை அரசு பூர்த்தி செய்துள்ளது.
பெருநகர சென்னையில் மட்டும், உச்சகட்ட மின்தேவையான 3,332 மெகாவாட் அளவை, 2017 மே 30-இலும், உச்ச மின்பயனீட்டு அளவான, 64.830 மில்லியன் யூனிட்டை, 2017 ஜூன் 2-இலும் பூர்த்தி செய்துள்ளோம். இது, இதுவரை இல்லாத சாதனையாகும்.
மின்சார நண்பன் திட்டம்: மின்சார நண்பன் என்ற புதிய திட்டம் 2017 ஜூன் 12-இல் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தில் மின்இணைப்புக் கோரும் வீட்டுக் கட்டடங்கள் மற்றும் வணிக கட்டடங்கள், மின்வாரியத்தின், மின்கம்பம் அல்லது மின்பகிர்மான பெட்டியிலிருந்து 100 அடிக்குள் இருந்தால், விண்ணப்பம் அளித்த அதே நாளில் மின்இணைப்புக் கொடுக்கப்படும்.
மின்இணைப்புக் கோரும் வீடு மற்றும் வணிக இடமானது, புதைவடம் இருக்கும் பகுதியில் அமைந்திருந்தால், விண்ணப்பம் அளித்த 48 மணி நேரத்திற்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.
மின்சார நண்பன் திட்டத்தின் மூலம், மின் பராமரிப்புப் பணிகள்
குறித்த தகவல் குறுஞ்செய்தி மூலம், அந்தந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு அனுப்பப்படும்.
இத்திட்டத்தில் இதுவரை, 1.60 கோடி மின் நுகர்வோரின் அலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டம் துவங்கப்பட்ட நாள் முதல், இன்று வரை 4.14 லட்சம் மின் நுகர்வோருக்கு குறுஞ்செய்தி மூலம் பராமரிப்புப் பணிகள் பற்றிய தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டிலேயே புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. 2017 மே 31 நிலவரப்படி, தமிழகத்தின் காற்றாலை மின் நிறுவு திறன் 7,854.81 மெகாவாட் ஆகும்.
நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின் நிறுவு திறனில் 28.43 சதவீதம் பங்களிப்புடன், நாட்டிலேயே மிக அதிகமான காற்றாலை மின்சக்தியுடன் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.
மின்சாரத் துறையில், தனி முத்திரை பதித்து, தமிழ்நாடு தான், பிற மாநிலங்களுக்கு எல்லாம் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது எனறார் அமைச்சர் தங்கமணி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com