விவசாய பயன்பாட்டுக்கு சூரிய மின்சக்தி நீர் பம்ப் திட்டம்

விவசாய பயன்பாட்டுக்காக சூரிய மின் சக்தி நீர் பம்ப் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.
விவசாய பயன்பாட்டுக்கு சூரிய மின்சக்தி நீர் பம்ப் திட்டம்

விவசாய பயன்பாட்டுக்காக சூரிய மின் சக்தி நீர் பம்ப் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.
எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் தங்கமணி திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகம் முழுவதும் 5, 7.5, 10 குதிரைத் திறன் கொண்ட மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத 1,000 எண்ணிக்கை சூரிய மின் சக்தி நீர் பம்புகள் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதற்கு தமிழக அரசு 40 சதவீதமும், எரிசக்தி துறை 20 சதவீதமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 30 சதவீதமும் மானியமாகத் தரும். விவசாயிகள் 10 சதவீதம் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.
மின் இணைப்புக்கு தத்கல்: விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் விரைந்து விவசாய மின் இணைப்பைப் பெறும் வகையில் விரைவு (தத்கல்) மின்னிணைப்பு வழங்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 5 குதிரைத் திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2.50 லட்சம், 7.5 குதிரைத்திறனுள்ள மின்மோட்டார்களுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரைத் திறனுள்ள மின்மோட்டார்களுக்கு ரூ.3 லட்சம் வீதம் ஒரு முறை கட்டணம் செலுத்தும் 10,000 விண்ணப்பதாரர்களுக்கு 6 மாத காலத்துக்குள் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.
சூரிய பூங்கா: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையினால் மாநிலத்திலேயே முதல்
வகையான 500 மெகாவாட் திறன் கொண்ட சூரிய பூங்கா ஒன்று தனியார் நிறுவனம் மூலம் நிறுவ உதவி செய்யப்படும்.
பணி நியமனம்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 2017-18-ஆம் ஆண்டில் 300 உதவி பொறியாளர் (மின்னியல்), 25 உதவிப் பொறியாளர் (சிவில்), 300 தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்), 400 கள உதவியாளர், 250 இளநிலை உதவியாளர் (கணக்கு), 300 கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை பதவிகளுக்கான தகுதியான நபர்கள் வெளிப்படையான முறையில் எழுத்துத் தேர்வு மூலமாகத் தேர்வு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இன ஒதுக்கீடு அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்படுவர்.
மின் பகிர்மானக் கோட்டம்: திருமழிசை, திட்டக்குடி, ஆலங்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் புதிய மின் பகிர்மான கோட்டங்கள் உருவாக்கப்படும். கிண்டியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அலுவலர் குடியிருப்பு அமைக்கப்படும்.
கொரட்டூரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்படும்.
கைபேசி செயலியில் மின் கட்டணம்: கைபேசி செயலி வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகில் வெளிப்பரப்பு உறைவி புதுப்பித்தல், அலகு 5-இல் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவுதல், அலகு 4-இல் புது சூடாக்கி அமைப்பு நிறுவுதல், நிலக்கரி கையாளும் பணியை மேம்படுத்த 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவுடைய ஓர் இணைப்பு நிலக்கரி கொணரும் அணைப்பு நிறுவுதல் ஆகிய பணிகள் ரூ.52 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
அம்மா பசுமை கிராமம்: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை வருடாந்திர அடிப்படையில் ஒரு கிராமத்துக்குத் தேவையான அனைத்து மின் சக்தியைப் பூர்த்தி செய்யும் விதமாக கிராமத்திலேயே கிடைக்கும் நிலையான பசுமை எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு அம்மா பசுமை கிராமம் ஒன்று நிறுவப்படும் என்றார்.
விவசாயிகளுக்கு 18 மணி நேர மும்முனை மின்சாரம்
மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ஆஸ்டின் பேசியது: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கருணாநிதிதான் வழங்கினார். மின்சாரத் துறையில் 20,000-த்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன என்றார்.
அப்போது அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டுக் கூறியது: விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை எம்ஜிஆர்தான் வழங்கினார். மின்சாரத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றார்.
ஆஸ்டின்: இலவச மின்சாரம் கேட்டவர்கள் எம்ஜிஆர் ஆட்சியில் சுடப்பட்டனர்.
தங்கமணி: அப்போது, எந்தக் கட்சியில் இருந்தீர்கள் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஆஸ்டின்: எந்தக் கட்சியில் இருந்தாலும் தலைமைக்கு விசுவாசமாக இருந்துள்ளேனே தவிர, தலைமைக்கு துரோகம் செய்தது இல்லை. காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் தரப்படும் என அமைச்சர் அறிவித்தார். ஆனால், தரப்படவில்லை.
தங்கமணி: 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் தருகிறோம் எனக் கூறவில்லை. 12 மணி நேரம் தருகிறோம் எனக் கூறினோம். தற்போது 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் தருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com