கர்ணன் கொல்கத்தா அழைத்துச் செல்லப்படுகிறார்

சென்னை விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார் நீதிபதி கர்ணன். காலை 11 மணிக்கு கொல்கத்தாவிற்கு  விமானம் மூலம் நீதிபதி

சென்னை: சென்னை விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார் நீதிபதி கர்ணன். காலை 11 மணிக்கு கொல்கத்தாவிற்கு  விமானம் மூலம் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் அழைத்துச் செல்லப்படுகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.கர்ணன் (62) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 2015-ஆம் ஆண்டில் பணியாற்றியபோது, அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல் உள்ளிட்ட சில நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரையின்பேரில், அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சென்ற பிறகும், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வந்த கர்ணன், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், மார்ச் 31-ஆம் தேதி அவர் ஆஜரானார். அப்போது, வழக்குத் தொடர்பாகப் பதிலளிக்க அவருக்கு 4 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் பதில் எதுவும் அளிக்காத நிலையில் அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், அவர் மனநலப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டதுடன், தனக்கு மனநலப் பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும், மனநலப் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் கூறி நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவரைக் கைது செய்து ஆஜர்படுத்த மேற்கு வங்க காவல் துறைத் தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, சென்னையில் தங்கியிருந்த நீதிபதி கர்ணன் தலைமறைவானார்.

அப்படைகள், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நீதிபதி கர்ணனை தேடி வந்தது. தலைமறைவாக இருந்த நிலையில், கர்ணன் கடந்த 12-ந் தேதி, நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், அவர் கோவை புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாக கொல்கத்தா போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று இரவு 7.30 மணிக்கு கோவை போலீஸாரின் ஒத்துழைப்புடன், மலுமிச்சம்பட்டி அருகே மாச்சேகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள அந்த வீட்டை கொல்கத்தா போலீஸார் முற்றுகையிட்டனர்.

ஆனால், பத்திரிகையாளர்கள் வராமல் நான் வெளியே வரமாட்டேன் என்று கூறி, போலீஸாருடன் கர்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சிறிது நேரம் கழித்து, அவரை கைது செய்த போலீஸார், கோவை விமான நிலையத்துக்கு தனி வாகனத்தில் அழைத்து சென்றனர்.

பின்னர், நீதிபதி கர்ணன் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார். இன்று கொல்கத்தாவுக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com