நிகழாண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடல்

தமிழகத்தில் இந்த ஆண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதால் அவற்றில் மாணவர் சேர்க்கை இம்முறை இருக்காது என உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறினார்.
நிகழாண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடல்

தமிழகத்தில் இந்த ஆண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதால் அவற்றில் மாணவர் சேர்க்கை இம்முறை இருக்காது என உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பி.இ. சேர்க்கை விண்ணப்பதாரர்களுக்கான சமவாய்ப்பு எண் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பின் அவர் அளித்த பேட்டி:
பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக் கிடைப்பது சற்று பாதிக்கப்பட்டிருப்பதால், பி.இ. படிப்புகளில் சேர்க்கை குறைந்து வருகிறது என்பது உண்மைதான்.
2017-18 கல்வியாண்டில் தமிழகத்தில் மொத்தம் 11 கல்லூரிகள் மூடப்படுவதால் இந்தக் கல்லூரிகளில் நிகழாண்டில் முதலாமாண்டு சேர்க்கை நடைபெறாது.
கோடை விடுமுறையை அதிகரிக்க முடிவு: இந்நிலையை மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்திக்கொள்ள, அவர்களுக்குப் படிக்கும்போது தொழில் பயிற்சி அவசியம்.
மாணவர்கள் தொழில் நிறுவனங்களுக்குச் சென்று அதிக நாள்கள் பயிற்சி பெறும் வகையில் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் 2, 4, 6 பருவத் தேர்வுகளுக்குப் பின்னர் வழங்கப்படும் கோடை விடுமுறையை அதிகரிக்கச் செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பருவத் தேர்வுகள் இப்போது 43 நாள்கள் நடத்தப்படுவதையும், குறைக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கட்டணம்: தமிழகத்தில் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தைப் பொருத்தவரை கடைசியாக 2012 ஜூலையில் மாற்றியமைக்கப்பட்டது. அதன் பிறகு, 5 ஆண்டுகளாக கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை.
இம்முறை கட்டணத்தை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகிறது. இதற்காக தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்புடன், கட்டண நிர்ணயக் குழு 3 முறை ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது. விரைவில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும்.
ஒரு புதுக் கல்லூரி: தமிழகத்தில் 527 பி.இ., பி.டெக். கல்லூரிகள், 53 கட்டடவியல் (பி.ஆர்க்.) கல்லூரிகள் என மொத்தம் 580 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன.
இந்த ஆண்டு புதிதாக ஒரு பொறியியல் கல்லூரி தொடங்க அகில இந்திய தொழில்நுட்ப கவுனசில் (ஏஐசிடிஇ) அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com