உள்ளாட்சிகளில் 30 நாள்களுக்குள் கட்டட வரைபட அனுமதி

உள்ளாட்சிகளில் கட்டட வரைபடத்துக்கு 30 நாள்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
உள்ளாட்சிகளில் 30 நாள்களுக்குள் கட்டட வரைபட அனுமதி

உள்ளாட்சிகளில் கட்டட வரைபடத்துக்கு 30 நாள்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கட்டட வரைபட அனுமதி கோரும் மனுக்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும்; கட்டட வரைபட அனுமதி கோரும் மனுக்களுக்கு, 30 நாள்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்காமல் இருந்தால், அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதி விதிகளுக்குட்பட்டு நில உரிமையாளர் மற்றும் கட்டுநர்கள் பணி தொடங்க அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கூடுதல் அதிகாரம்: உள்ளாட்சி அமைப்புகளுக்குத் திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி வழங்க கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்து வெளியிட்ட அறிவிப்பு: திட்டம் மற்றும் கட்டட அனுமதி பெறுவதில், நகர்ப்புற -ஊரக உள்ளாட்சிகளில்
குறிப்பிட்ட அளவுக்கு மேல் கட்டடம் கட்ட அனுமதி பெறுவதற்கு வீட்டு வசதித் துறையிடம் திட்ட அனுமதியும், உள்ளாட்சி துறையிடம் கட்டட அனுமதியும் பெறுவதில் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் உள்ளன. அத்துடன் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசிடம் கடனுதவி பெற்று கட்டடம் கட்டுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சரிடமும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரிடமும், தொடர்புடைய உயர் அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்தார்.
அதன் அடிப்படையில், பொதுமக்களின் இன்னல்களை களைந்து எளிய வகையில் உரிய காலக்கெடுவுக்குள் திட்டம் மற்றும் கட்டட அனுமதி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் மாற்றி கூடுதலாக அளிக்கப்படும்.
கட்டட அனுமதி: உள்ளாட்சி அமைப்புகளால் குடியிருப்பு கட்டடங்களுக்கு 4,000 சதுர அடி வரையில் திட்ட அனுமதி வழங்கும் தற்போதுள்ள அதிகாரப் பகிர்வினை கூடுதலாக உயர்த்தி கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படும்.
வணிகக் கட்டடங்கள் அனுமதி:
மேலும், வணிகக் கட்டடங்களுக்கு 2000 சதுர அடி வரையில் திட்ட அனுமதி வழங்கும் தற்போதுள்ள அதிகாரப் பகிர்வினைக் கூடுதலாக உயர்த்தி வணிகக் கட்டடங்கள், பொது கட்டடங்கள் மற்றும் சிறப்பு கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படும்.
நகர உள்ளாட்சிக்கு அதிகாரம்: 8 மனைகள் வரை, மனை உட்பிரிவு அனுமதி வழங்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளதைப்போல், மற்ற நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரம் வழங்கப்படும் என்றார் அமைச்சர் வேலுமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com