மின் கட்டணம் செலுத்த ஸ்மார்ட் கார்டு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மின் கட்டணம் செலுத்த ஸ்மார்ட் கார்டு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மின் கட்டணம், சொத்துவரி, குடிநீர் வரி செலுத்த ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.

மின் கட்டணம், சொத்துவரி, குடிநீர் வரி செலுத்த ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை தியாகராய சாலையில் உள்ள பாண்டிபஜார் பகுதியில் அகலமான நடைபாதை, மையத் தடுப்பான், பேருந்து மற்றும் இரு சக்கர வாகனங்களுக்குத் தனிப்பட்ட தடங்கள், பேட்டரி கார், வாகனப் பாதை, பொதுமக்கள் இளைப்பாறுவதற்கான இருக்கைகள், நவீன கழிப்பறைகள், சுத்தமான குடிநீர் மற்றும் முதலுதவி மையங்களுடன் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பாதசாரிகள் வளாகம் அமைக்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் இது செயல்படுத்தப்படும்.
பல அடுக்கு வாகன நிறுத்தம்: தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் 1,488 சதுர மீட்டர் பரப்பளவில், 2 கீழ்த்தளம், தரைத்தளம் மற்றும் 5 மேல்தளங்கள் கொண்ட பல அடுக்கு வாகன நிறுத்தக் கட்டடம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் நகர நிதி மூலம் ரூ.36.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதில், சுமார் 500 இரு சக்கர வாகனங்களும், 200 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டங்களின் மேற்கூரையில் ரூ.39 கோடி திட்ட மதிப்பீட்டில் சூரிய மின் உற்பத்தித் தகடுகள் அமைக்கப்படும்.
பெரு நகர சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மின் கட்டணத்துக்கு ஸ்மார்ட் கார்டு: சென்னை மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கட்டணம், மின் கட்டணம், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றைச் சிரமமின்றி விரைவாகச் செலுத்தும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஸ்மார்ட் கார்டு அறிமுதப்படுத்தப்படும்.
சென்னை மாநகரப் பகுதிகளில் புதிய குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை இணையதளம் மூலம் பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் கண்காணித்தல் முறை கொண்டு வரப்படும்.
சென்னை மாநகர விரிவாக்கப்பட்ட பகுதிகளில், வீடுகளில் உள்ள கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகளிலிருந்து கழிவுநீரை அகற்ற சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகரற்று வாரியத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் வாடகை கழிவுநீர் ஊர்திகள் ஏற்பாடு செய்யப்படும்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.226 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com