முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்ட முறைகேட்டில் 346 மருத்துவமனைகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு புதன்கிழமை தெரிவித்தது.
முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்ட முறைகேட்டில் 346 மருத்துவமனைகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு புதன்கிழமை தெரிவித்தது.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், பல தனியார் மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறச் செல்லும் நோயாளிகளிடம் பணம் வசூலிக்கின்றனர். எனவே, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவோரிடம் பணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை கோரி, மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு 2014-இல் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. எனவே, சுகாதாரத் துறைச் செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி,  கே.கே. ரமேஷ் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு, நீதிபதிகள் ஏ. செல்வம், என். ஆதிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் முறையாகச் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2012-2016 ஆம் ஆண்டு வரை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்பாக மருத்துவ முகாம்கள் நடத்தாதது, சிகிச்சைக்காக பணம் பெற்றது உள்ளிட்ட குறைகளைக் கொண்ட 346 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டன.

இதில், 16 மருத்துவமனைகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 117 மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை, ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com