14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்கள் விடுதலையா? அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்

சிறையில் 14 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

சிறையில் 14 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமூன் அன்சாரி பேசியது: 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டு வந்தனர். ஆனால், சுப்பிரமணியன்சாமி தொடர்ந்த வழக்கால், யாரையும் விடுதலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, சுப்பிரமணியன் சுவாமியின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால், 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் பேரறிவாளன் பரோல் கேட்டுள்ளார். ஆனால், கிடைக்கவில்லை. கருணைக் கொலை செய்துவிடுங்கள் என ராபர்ட் பயஸ், முதல்வருக்கே கடிதம் எழுதியுள்ளார். எனவே, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த பதில்: 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கலாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததுபோல, எங்கள் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யலாம் என்று கூறினார். இது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்படலாம் என்று நானும் நம்புகிறேன்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில் தீர்மானமே நிறைவேற்றினார். விடுதலை செய்வது குறித்து 7 நாள்களுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், மத்திய அரசு நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டது. வழக்கு நிலுவையில் உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com