ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியான ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் அதிக அளவில் பண விநியோகம் செய்ததாக குற்றசாட்டுகள் எழுந்ததை அடுத்து, தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரத்தில், தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக, தகவல்களை  அளிக்குமாறு கோரி, சென்னையைச் சேர்ந்த வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எட்டு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதில் ஒரு கேள்விக்கு மட்டும் பதிலளித்த தேர்தல் ஆணையம் மற்ற கேள்விகளை, தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வரவில்லை என்று கூறி பதிலளிக்க மறுத்து விட்டது.

அந்த குறிப்பிட்ட ஒரு பதிலில், ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில்   வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் வந்தவுடன் வருமான வரித்துறை அதிரடியாக பல இடங்களில் சோதனை செய்தது. அப்பொழுது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜு, தங்கமணி மற்றும் விஜய பாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு தொடர, தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கபப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்  தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வைரக்கண்ணன் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு கடந்த திங்கள் அன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  

அப்பொழுது தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் ஆஜராகினர். விசாரணையின் பொழுது கடந்த ஏப்ரல் மாதத்திலேயே இந்த விவகாரம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதற்கு நீதின்றம் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நபர்கள் மீது வழக்கு தொடர பரிந்துரை செய்திருந்த பொழுதும், ஏன் அவ்வாறு செய்யப்படவில்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு என்ன செய்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுயது.

இதற்கு இரு தரப்பிலிருந்தும் சரியான விளக்கங்கள் தரப்படவில்லை. இதனால் வருமான வரித்துறை தாக்கல் செய்த அறிக்கையின் மூலமாகத்தான் தேர்தல் ஆணையம் வழக்கு தொடர பரிந்துரை செய்துள்ளது. எனவே வருமான வரித்துறையின் விசாரணை அறிக்கையை 23-ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றே வழக்கை ஒத்தி வைத்தும் உத்தரவிட்டது.

அதன்படி இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக பதில் அளிக்குமாறு தமிழக அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் காவல் ஆணையர் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com