கலந்தாய்வு தாமதம்: மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசின் நிலை என்ன? ராமதாஸ் கேள்வி

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கலந்தாய்வு தாமதம்: மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசின் நிலை என்ன? ராமதாஸ் கேள்வி

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக இம்மாதம் 27-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படவிருந்த ஒற்றைச்சாளரக் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பொறியியல் கலந்தாய்வை முன்கூட்டி நடத்துவதால் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாணவர்களால் அதிகம் விரும்பப்படும் படிப்பு மருத்துவம் தான் என்பதால், முதலில் அப்படிப்புக்கு கலந்தாய்வு நடத்தி முடித்து விட்டு, அதன்பிறகே மற்றப் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.  ஆனால், நீட் தேர்விலிருந்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் விலக்களிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட இரு சட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால்  மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடக்குமா? அல்லது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடக்குமா? என்ற வினாவுக்கு விடை கிடைக்க வில்லை. இது தான் மாணவர் சேர்க்கை விஷயத்தில் நிலவும் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணமாகும்.

மருத்துவப் படிப்புக்கு கலந்தாய்வு நடத்த முடியாமல் மற்ற தொழில்படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவது குழப்பத்தையே ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, மருத்துவப் படிப்புக்கு முன்பாக பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு நடத்தப்படுவதாக வைத்துக் கொள்வோம். மருத்துவப்படிப்பில் சேரத் தகுதியுடையவர்களில் குறைந்தபட்சம் 2000 பேருக்காவது பொறியியல் படிப்பிலும் இடம் கிடைக்கும். இவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து விட்டு. பின்னர் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தவுடன் அதில் சேர்ந்து விடுவார்கள். அதற்குள் கலந்தாய்வு முடிந்து விடும் என்பதால், தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து அவர்கள் விட்டுச் சென்ற பொறியியல் கல்வி இடங்கள் காலியாகவே கிடக்கும். வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் கொண்ட இந்த இடங்கள் யாருக்கும் பயன்படாமல் வீணாகக் கிடப்பது பெரும் இழப்பாகும்.

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்காததைக் காரணம் காட்டி, பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை ஆகும். ஆனால், வேளாண் கல்விக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கால்நடை மருத்துவம், மீன் வளம் ஆகியவற்றுக்கான கலந்தாய்வும் விரைவில் தொடங்கவுள்ளன. இப்போது இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தால் நிச்சயமாக இந்தப் படிப்புகளில் இருந்து விலகி விடுவார்கள். அத்தகைய சூழலில் அந்த இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. அவ்வாறு நடத்தும்போது அந்த இடங்கள் தகுதியானவர்களுக்கு கிடைக்காமல் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கிடைப்பது போன்ற பிரச்னைகள் எழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, மற்றப்படிப்புகளுக்கு முன்பாக மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு முடிக்கப்பட வேண்டும்.

ஆனால், மருத்துவக் கல்வி கலந்தாய்வை நடத்துவதற்கான எந்த ஏற்பாட்டையும் அரசு செய்யவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 4 மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், அதற்கு மத்திய அரசின் ஒப்புதலை இன்னும் பெற முடியவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கேட்பதற்கு முன்பே போட்டிப்போட்டுக் கொண்டு ஆதரவளிக்கும் பினாமி முதல்வர், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து சாதிக்க மறுக்கிறார்.  ஊழல் வழக்கு, வருமானவரிச் சோதனை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க மத்திய அரசின் காலில் விழுந்து கிடக்கும் பினாமி அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது.

நீட் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படாமல் இருப்பதற்காக அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும். நீட் தேர்வு முடிவுகள் 26-ஆம் தேதிக்கு முன்பாக எந்நேரமும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்பாக விண்ணப்பங்கள் வினியோகம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை அரசு இன்னும் தொடங்கவில்லை. கடந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதிக்குள்  மருத்துவக் கலந்தாய்வு நிறைவடைந்து விட்டது. இந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வு தாமதமாவதால் அனைத்துப் படிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் தொடக்கம் தாமதமாகக்கூடும்.

எனவே, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பதையும், கலந்தாய்வு அட்டவணையையும் ஆட்சியாளர்கள் உடனடியாக அறிவிக்க வேண்டும். அத்துடன், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதாக இருந்தால் குறைந்தது 80% இடங்களை மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com