திமுக 7 எம்எல்ஏக்களுக்கு மன்னிப்பு வழங்கினார் சபாநாயகர் தனபால்

உரிமை மீறல் விவகாரத்தில் திமுக உறுப்பினர்கள் 7 பேரையும் மன்னித்து சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
திமுக 7 எம்எல்ஏக்களுக்கு மன்னிப்பு வழங்கினார் சபாநாயகர் தனபால்

சென்னை: உரிமை மீறல் விவகாரத்தில் திமுக உறுப்பினர்கள் 7 பேரையும் மன்னித்து சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 18-இல் சட்டப் பேரவையில் அரசுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தப்பட்டது. அப்போது, திமுக எம்எல்ஏக்களால் வரம்பு மீறிய சம்பவங்கள் நடந்தன. சிலர் மேஜையை உடைத்து, சேர்களை வீசினர்.

இதையடுத்து அவைக்கு குந்தகம் விளைவித்ததாக திமுக எம்எல்ஏக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்ய அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் சபாநாகரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை உரிமை உரிமைக்குழு பரிந்துரை செய்தார் சபாநாயகர்.

புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு திமுக எம்எல்ஏக்கள் செல்வம், மஸ்தான், சுரேஷ் ராஜன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், முருகன் மற்றும் அம்பேத்குமார் ஆகிய 7‌ உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்ப‌டையில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த அமளியில் திமுக எம்எல்ஏக்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்ய உரிமைக்குழு பரிந்துரை செய்தது.

இதுகுறித்து நேற்று நடைபெற்ற அவை உரிமைக் குழுவில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், திமுக எம்எல்ஏக்கள் 7 பேர் மீதான உரிமை மீறல் விவகாரத்தில் சட்டப்பேரவையில் இன்று அவை‌ உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையை பரிசீலித்த சபாநாயகர் தனபால், திமுக எம்எல்ஏக்களை மன்னிப்பதாக தெரிவித்தார்.

மேலும், 7 எம்எல்ஏக்களும் தன்னிடம் வந்து மன்னிப்பு கூறியதாகவும் 7 எம்எல்ஏகளில் 6 பேர் பேரவைக்கு புதியவர்கள் என்பதால் எச்சரிக்கையிட்டு சஸ்பெண்டை ரத்து செய்வதாக தனபால் கூறினார்.

சபாநாயகரின் இந்த முடிவுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com