திருச்சி துப்பாக்கி ஆலை தனியாருக்குச் செல்லாது: அமைச்சர் எம்.சி.சம்பத்

திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை தனியாருக்குச் செல்வதை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
திருச்சி துப்பாக்கி ஆலை தனியாருக்குச் செல்லாது: அமைச்சர் எம்.சி.சம்பத்

திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலை தனியாருக்குச் செல்வதை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இந்தப் பிரச்னையை திருவெறும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுப்பினார். அப்போது அவர் பேசியது: திருவெறும்பூரில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலை நமது மாநிலத்துக்கு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்குத் தேவையான துப்பாக்கிகளையும் தயார் செய்து கொடுக்கிறது. ராணுவம், துணை ராணுவம் போன்றவற்றின் தேவைக்கான துப்பாக்கிகளையும் உற்பத்தி செய்கிறது.
கடந்த ஆண்டு மத்திய அரசின் நீதி ஆயோக் பரிந்துரைப்படி இந்த ஆலையை தனியார் மயமாக்கும் முயற்சிகளை மத்திய பாஜக அரசு செய்கிறது. மத்திய அரசு நிறுவனம் என்றாலும் தமிழக மக்கள் அதிக அளவு பணிபுரிகிறார்கள். எனவே, தங்களுக்கு பணி உத்தரவாதம் இருக்குமா என்ற பதற்றத்தில் அவர்கள் உள்ளனர். இந்தப் பிரச்னையில் போதிய அழுத்தத்தை மத்திய அரசுக்கு வழங்கி இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் அளித்த பதில்: மத்திய அரசின் நீதி ஆயோக் பரிந்துரைப்படி, துப்பாக்கி தயாரிப்பு ஆலையை பொது மற்றும் தனியார் துறையுடன் இணைந்து செயல்படுத்தலாமா என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு திருச்சி துப்பாக்கி ஆலை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதையடுத்து, அங்கு பணிபுரியும் பணியாளர்கள் தனியார்மயத்தை எதிர்த்து வரும் 27 -ஆம் தேதி தர்னா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிகிறது. துப்பாக்கி தயாரிப்பு ஆலையை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக எந்தவொரு முடிவையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. ஆனாலும், இதனை தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கும் என்று அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com