நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.90 லட்சம்: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்

நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.90 லட்சம் ஒதுக்கப்படும் என்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.90 லட்சம்: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்

நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க ரூ.90 லட்சம் ஒதுக்கப்படும் என்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:
மகாபலிபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் ரூ.1.50 கோடியில் 7 அடி உயர கருங்கல் சுவர், ரூ.90 லட்சம் செலவில் மாணவர்கள் விடுதி, ரூ.30 லட்சம் செலவில் இரண்டு தொழிற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும்.
சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி மற்றும் மகாபலிபுரம் அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.11 லட்சம் இரண்டு மடங்காக உயர்த்தி ரூ.22 லட்சமாக வழங்கப்படும். 3 கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச பயிற்சிப் பொருள்கள் வழங்க ரூ.9.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் படிக்கும் 177 மாணவர்களுக்கு ரூ.500 வீதம் 10 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கு ரூ.8.85 லட்சம் ஒதுக்கப்படும்.
17 மாவட்ட அரசு அரசு இசைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கலை வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வழங்க ரூ.8 லட்சமும், அரசு இசைப் பள்ளிகளில் ஒலி, ஒளி நூலகத்தை ஏற்படுத்த பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.17 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் தமிழிசை விழாக்கள் நடத்த ரூ.15.75 லட்சம் ஒதுக்கப்படும். கலை பண்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் இணையதளங்கள் ரூ.20 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.
7 மண்டல கலை பண்பாட்டு மையங்கள், சென்னை, கும்பகோணம், மாகாபலிபுரத்தில் உளள கலைக் கல்லூரிகளில் ஓவிய சிற்பக் கண்காட்சியை நடத்த ரூ.1 லட்சம் வீதம் 10 இடங்களில் நடத்துவதற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
4 அரசு இசைக் கல்லூரிகள் மற்றும் மகாபலிபுரம் கலைக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டுக்கு அறைகலன்கள், வரைபட தாங்கிகள், உளிகள் ஆகியவை ரூ.14 லட்சம் செலவில் வாங்கப்படும்
கலைஞர்களுக்கு நிதியுதவி: 2017-2018-ஆம் ஆண்டில் கூடுதலாக 500 நலிந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும். இதற்கென்று ஆண்டுக்கு ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
இளம்கலைஞர்களை ஊக்குவிக்கும் திட்டத்துக்கான ஒதுக்கீட்டுத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இயல், இசை, நாடக, நாட்டிய, கிராமிய விழாக்களை நடத்த ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
தமிழ் வளர்ச்சி வளாகத்தில் செயல்பட்டு வரும் கலை பண்பாட்டு இயக்ககத்துக்கு ரூ.25 லட்சம் செலவில் மின்தூக்கி, ரூ.18 லட்சம் செலவில் 3 இன்வெர்ட்டர் கருவி, மதுரை கலை பண்பாட்டு மையத்துக்கு ரூ.8 லட்சம் செலவில் வாகனம் ஆகியவை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com