கொள்ளிடம் முகத்துவாரத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை உடனே செயல்படுத்துக! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கொள்ளிடம் முகத்துவாரத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொள்ளிடம் முகத்துவாரத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை உடனே செயல்படுத்துக! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கொள்ளிடம் முகத்துவாரத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
மக்கள் நலனிலும், விவசாயிகள் நலனிலும் தமிழக ஆட்சியாளர்களுக்கு சிறிதும் அக்கறை இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் வீணாவதை தடுப்பதற்கான தடுப்பணைத் திட்டத்தை செயல்படுத்த மறுப்பது தான். உழவைப் பற்றிக் கவலையில்லை; ஊழலைப் பற்றித் தான் கவலை என்ற பினாமி அரசின் அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

நிலத்தில் ஓடும் கடல் என்று போற்றப்படும் கொள்ளிடம் ஆற்றைக் கொண்டு தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற முடியும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக கொள்ளிடக் கரையோர மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது திறந்து விடப்படும் தண்ணீரை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்வதற்காக 110 கி.மீ நீளம் கொண்ட கொள்ளிடத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை வீதம் குறைந்தபட்சம் 20 தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று பா.ம.க வலியுறுத்தி வருகிறது.

கொள்ளிடத்தைக் காப்பதற்காக தடுப்பணைகளைக் கட்ட வேண்டும் என்று நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழக அரசோ கொள்ளிடம் ஆற்றை முற்றிலுமாக அழித்து விடும் நோக்கத்துடன் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகளை திறக்க அனுமதி அளித்திருக்கிறது. கொள்ளிடத்தில் பல இடங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் வழியாக கடல் நீர் கொள்ளிடம் ஆற்றுக்குள் நுழைந்து வருகிறது. கொள்ளிடம் கடலில் கலக்கும் பகுதியில் தடுப்பணை கட்டி இதைத்தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.

இதனால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. முகத்துவாரம் அமைந்துள்ள அளக்குடியில் தொடங்கி 20 கிலோ மீட்டர் அளவுக்கு கடல் நீர் உள்நுழைந்திருக்கிறது. சந்தப்படுகை, திட்டுப்படுகை, அனுமந்தபுரம், முதலைமேடு உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.  கடல் நீர் உட்புகுந்ததால் நிலத்தடி நீரும் உப்பாக மாறிவிட்டது. இதனால், குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். மேலும், இப்பகுதிகளில் உள்ள 10,000 ஏக்கர்  விளைநிலங்கள் உவர் நிலங்களாக மாறி விட்டன. இதனால் அப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்வதையே முற்றிலுமாக நிறுத்தி விட்டனர். கொள்ளிடம் முகத்துவாரத்திலும், உட்பகுதிகளில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒன்று என்ற அளவிலும் தடுப்பணைகள் கட்டப்படாவிட்டால், கொள்ளிடக் கரையோரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களும் விவசாயத்துக்கு பயன்படாமல் போய்விடக்கூடும்.

கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடல் நீர் உள்நுழைவது குறித்து ஆய்வு செய்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கொள்ளிடம் கடலில் கலக்கும் கடலூர் மாவட்டம் மேலதிருக்கழிப்பாளையத்திற்கும்,  நாகை மாவட்டம் அளக்குடிக்கும் இடையில் ரூ.117 கோடி செலவில் தடுப்பணை கட்டலாம் என பரிந்துரை செய்துள்ளனர். இதற்கான திட்ட அறிக்கையையும் தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், தமிழக ஆட்சியாளர்களுக்கு தங்களின் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதே பெரும்பாடாக இருப்பதால், மக்கள் நலனுக்கான இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சிந்திக்கக்கூட நேரமில்லை.

இதுதவிர, நாகை மாவட்டம், குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையில், கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கும் வகையில், 400 கோடி ரூபாயில் கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டப்படும் என்று 04.07.2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்பின் 3 ஆண்டுகளாகியும் இதுவரை அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்த அடிப்படைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதைக் கண்டித்தும் இரு தடுப்பணைகளையும்  உடனடியாக கட்ட வலியுறுத்தியும் கடந்த 18&ஆம் தேதி கொள்ளிடம் கிராமத்தில் எனது தலைமையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான உழவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று கொள்ளிடத்தில் தடுப்பணைத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும்படி வலியுறுத்தினர்.

ஆனால், ஆதனூர் தடுப்பணைத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவரது சொந்தத் தொகுதியில் திட்டங்களை செயல்படுத்த கொண்டு சென்று விட்டதாலும், முகத்துவாரத் தடுப்பணைத் திட்டத்திற்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதாலும் இத்திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படவில்லை என்று தோன்றுகிறது. ஆனால், இத்திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படா விட்டால் கொள்ளிடப் பாசனப் பகுதிகளில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும். அவற்றைத் தடுக்கும் வகையில், முதற்கட்டமாக கொள்ளிடம் முகத்துவாரத்தில் தடுப்பணைக் கட்டும் திட்டத்திற்கு அடுத்த ஒரு மாதத்திற்குள் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடும் செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் தடுப்பணை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாவிட்டால் மக்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன் தடுப்பணை கட்டும் பணியை பாட்டாளி மக்கள் கட்சியே தொடங்கும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com