புதுவை துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருக்கான அதிகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
புதுவை துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள்: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருக்கான அதிகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான கோப்புகளுக்கு அனுமதி தராமல் ஆளுநர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார். அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், முதல்வரின் நிதி அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கிரண் பேடி பரிந்துரைத்தார் என புகார் எழுந்தது.
""அவ்வாறு நான் பரிந்துரைக்கவில்லை. நிதி மேலாண்மைக்காக அதிகாரத்தைப் பரவலாக்கும் பணியைத்தான் மேற்கொண்டேன்'' என கிரண் பேடி மறுப்புத் தெரிவித்திருந்தார்.
ஆளுநர் கிரண் பேடியின் செயல்பாடுகள், அதிகார மீறல்கள் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநர் மாளிகைக்கு பதில் கடிதம் எழுதியுள்ளது.
ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பாக கேள்வி பதில் வடிவில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அவை வருமாறு:

1. புதுவையில் பல்வேறு துறைகளில் அன்றாடப் பணிகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா?
யூனியன் பிரதேச பணிகள் சட்டம் 21 (5)}இன் கீழ் எந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களையும் கேட்டுப் பெறலாம். மேலும் எந்த விவகாரம் தொடர்பான கோப்பையும் கேட்டு பெற அதிகாரம் உள்ளது.

2. துணைநிலை ஆளுநர் நேரடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள முடியுமா?
பிரிவு 21 (5) }கீழ் உள்ள அதிகாரங்கள்படி அதிகாரிகளுடன் நேரடியாக ஆளுநர் ஆலோசிக்க முடியும்.

3. துறை தொடர்பான முழுமையான கோப்பைப் பெற முடியுமா அல்லது செயலரிடம் இருந்து வெறும் ஆவணங்களை மட்டும் பெற முடியுமா?
முழு கோப்பையும் கேட்டுப் பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

4. அமைச்சரவை, சட்டப்பேரவை இருக்கும் போது ஆளுநர் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது அரசியல் சட்டத்தை மீறுவதாகுமா?
மாநில ஆளுநரைக் காட்டிலும் துணைநிலை ஆளுநருக்குப் பரவலான அதிகாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அமைச்சரவையின் அறிவுரை இன்றியும் செயல்படலாம். கருத்து வேறுபாடு ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் முடிவுக்கு விட வேண்டும். அவசரத் தேவை ஏற்பட்டால் ஆளுநரே உத்தரவிடலாம்.

5. தலைமைச் செயலகத்துக்கு அனுப்பாமல் தான் கையெழுத்திட்ட அரசாணையைச் செல்லாதது என ஆளுநரால் அறிவிக்க முடியுமா?
அரசாணையில் தனக்கு உடன்பாடில்லாத நிலையில், அதற்கு மாறாக துறைச் செயலரும், அமைச்சரும் தீர்மானித்தால் விதிகள் 50, 53}இன்படி பிரச்னையைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்.

6. நகரமைப்பு, துறைமுகத் துறை அதிகாரிகளை நேரடியாக அழைக்கலாமா, மனுக்களை முதல்வருக்கோ, அமைச்சருக்கோ, தலைமைச் செயலருக்கோ அனுப்பாமல் நேரடியாகத் துறை அதிகாரிக்கு அனுப்பலாமா, பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதுதல், அதிகாரிகள் பணிநீக்கம், ஆய்வுக் கூட்டத்துக்கு அழைக்க முடியுமா?
பிரிவு 21 (5)} இன் கீழ் துறைச் செயலரை அழைத்து எந்த ஆவணத்தையும், கோப்பையும் அளிக்க உத்தரவிடலாம்.

7. முதல்வர், அமைச்சர்களை அழைத்து அவர்கள் வகிக்கும் துறைகள் தொடர்பாக விவரங்களைப் பெற முடியுமா?
ஏதாவது சந்தேகம் இருந்தாலோ, விவரங்கள் தேவைப்பட்டாலோ முதல்வர், அமைச்சரிடம் விவரம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளலாம்.
இந்தக் கடிதத்தின் நகல் முதல்வருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் முதல்வர் எழுதிய 5 கடிதங்களின் அடிப்படையில் இந்த விளக்கத்தை உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com