குமரி மாவட்டத்தில் 3ஆவது நாளாக சாரல் மழை: அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 3ஆவது நாளாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை விழுந்த மிதமான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை விழுந்த மிதமான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 3ஆவது நாளாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை ஜூன் மாத தொடக்கத்தில் பெய்தது. இதைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்திலும் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு வார காலம் பெய்த மழையால் சுற்றுப்புற சூழல் மாறத் தொடங்கியது.
இந்நிலையில், மீண்டும் வெயில் கொளுத்தத் தொடங்கியது. 15 நாள்களாக கோடைக் காலம் போல வெயில் அடித்ததால், நிகழாண்டும் கடந்த ஆண்டைபோல் வறட்சி நிலவுமோ என்று மக்கள் அச்சப்பட்டனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
சனிக்கிழமை காலையிலும் நாகர்கோவில், சுசீந்திரம், வழுக்கம்பாறை, சாமித்தோப்பு, குலசேகரம், தக்கலை, அருமனை, கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசியது. வானம் மேக மூட்டமாகக் காணப்பட்டது.
சனிக்கிழமை இரவிலும், ஞாயிற்றுக்கிழமை பகலிலும் மழை தொடர்ந்து பெய்தது. மலையோரப் பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னிப்பூ சாகுபடி பணிகளைத் தொடங்குவதில் மும்முரம் காட்டி வருகிறார்கள். மழை கைகொடுத்தால் மட்டுமே நிகழாண்டு கன்னிப்பூ சாகுபடி மேற்கொள்ள முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சிற்றாறு 2 அணைப் பகுதியில் 21.2 மி.மீ. மழை பதிவானது. மலையோரப் பகுதிகளிலும், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 14.05 அடியாக உள்ளது. அணைக்கு 94 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் தற்போது 29 அடியை எட்டியுள்ளது.
அணைக்கு 42 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 30 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சிற்றாறு 1 அணைக்கு 8 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு 2 அணைக்கு 39 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 30 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நிகழாண்டில் மழைப் பொழிவு குறைவாக இருந்தாலும் தென்மேற்குப் பருவமழை அதிக அளவு பெய்யும் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளதை நம்பி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com