ஜி.எஸ்.டி.யால் விலைவாசி உயராது: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வருவதால் பொருள்களின் விலை உயராது, மாறாக நாட்டின் பொருளாதாரம்தான் உயரும் என மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி கருத்தரங்கில் பேசுகிறார் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.
சென்னையில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி கருத்தரங்கில் பேசுகிறார் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்.

ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை வரி) நடைமுறைக்கு வருவதால் பொருள்களின் விலை உயராது, மாறாக நாட்டின் பொருளாதாரம்தான் உயரும் என மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஜி.எஸ்.டி. ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அதனையொட்டி, உற்பத்தியாளர்களுக்கும், வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஜி.எஸ்.டி.யில் உள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையில் அதுதொடர்பான கருத்தரங்கம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது:
ஜி.எஸ்.டி.யில் வருவாய் நடுநிலை கட்டணம்தான் (ஆர்.என்.ஆர்.) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது ஒரு பொருளுக்கு இப்போது விதிக்கப்படும் வரியை அதே அளவிலோ அல்லது அதைவிடக் குறைவாக விதிப்பது. மாறாக இப்போது இருக்கும் வரியை விடக் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே ஜி.எஸ்.டி. கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, சிறு உற்பத்தியாளர்கள், வணிகர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ரூ.20 லட்சத்துக்கும் குறைவான விற்றுமுதலுடன் தொழில் செய்பவர்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. அவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது.
வரி கட்டக் கூடிய அனைவரையும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய வரி செலுத்தும் வரம்புக்குள் கொண்டுவருவதுதான் ஜி.எஸ்.டி.யின் முதன்மையான குறிக்கோள். இதன் மூலம் நாட்டின் பொருளாதரம் உயரும் என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்: தமிழகத்தில் எதிர்ப்புக் குரல் என்பது எதற்கு வேண்டுமானாலும் வரும். அதிலும் மத்திய அரசு ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறது என்றால், அதுகுறித்து முழுமையாகத் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அதை எதிர்ப்பதுதான் தமிழகத்தில் உள்ள தலைவர்களின் இயல்பாக உள்ளது. இவர்கள் சொல்வதற்கு மாறாக ஜி.எஸ்.டி. மிகப் பெரிய பலன்களை அளிக்க உள்ளது. வரும் காலத்தில் இந்தத் திட்டத்தை அனைவரும் வரவேற்பர் என்றார்.
வியாபாரிகள் கோரிக்கை: கூட்டத்தில் கலந்து கொண்ட அரிசி மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகி மோகன், ஜி.எஸ்.டி. வரியில் பாரம்பரிய உணவுப் பொருளான சாமானிய மக்கள் சாப்பிடும் பாசுமதி அரிசி அல்லாத மற்ற அரிசி வகைகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆடம்பரப் பொருளான தங்கத்துக்கு 3 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனவே சாமானிய மக்களின் உணவுப் பொருளான அரிசிக்கு ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், சினிமா தயாரிப்புக்கான வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், சினிமா துறையின் பங்களிப்பு மிக மிக முக்கியம். அவர்களுக்கு என்னென்ன பாதிப்பு என்று சொன்னால் அது பற்றி அதிகாரிகளின் விளக்கத்தைக் கேட்டு ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு எடுத்துச் செல்வோம் என்றார்.
சாதாரண மக்கள் பயன்படுத்தும் கோரைப்புல்லில் இருந்து தயாரிக்கப்படும் பாய்களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரைப்பாய் வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சங்கரன், பிளாஸ்டிக் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.
ஜவுளி விற்பனையாளர்கள் ஜவுளி விற்பனை மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

வணிகர்களுக்கு ஓய்வூதியம்: விக்கிரமராஜா வேண்டுகோள்

ஜி.எஸ்.டி. வரி வருவாயில் 1 சதவீதத்தை வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப் பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் விக்கிரமராஜா பேசியது: ஜி.எஸ்.டி. மூலம் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் வரப்போகிறது. வரி வருவாயில் 1 சதவீதத்தைப் பயன்படுத்தி, 60 வயதைக் கடந்த வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்யவேண்டும்.
இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு இழப்பீடு வழங்கவும், இந்த வரி வருவாய் மூலம் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com