ஹைட்ரோ கார்பன் திட்டம்: ஜூலை 11-ல் புதுகை ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜூலை 11}ம் தேதி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என கீரமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
புதுகை மாவட்டம், கீரமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் திரைப்பட இயக்குநர் கௌதமன்.
புதுகை மாவட்டம், கீரமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் திரைப்பட இயக்குநர் கௌதமன்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜூலை 11}ம் தேதி புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என கீரமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். தொடர்ந்து, 75 நாட்களாக பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கீரமங்கலத்தில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் டி. புஷ்பராஜ் தலைமையில், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் குழு ஆலோசனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், நெடுவாசலைச் சுற்றியுள்ள சுமார் 70}க்கும் மேற்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக சுமார் 30 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, உயர்நிலைக் குழு வழிகாட்டுதலின்படி திட்டம் ரத்தாகும் வரை போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றி, திட்டத்தை ரத்து செய்யாத பட்சத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் விவசாயிகளை திரட்டி, ஜூலை 11}ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ. மெய்யநாதன், திரைப்பட இயக்குநர் கௌதமன், முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் த. செங்கோடன், திரைப்பட துணை நடிகர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பழனிவேல் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு திரைப்பட இயக்குநர் கௌதமன் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கேட்காமலே தமிழகத்தின் ஆளு கட்சியின் இரு அணிகளும் போட்டிப்போட்டுக் கொண்டு ஆதரவை தெரிவித்தது தவறு. மாறாக, குடியரசுத் தலைவர் தேர்தல் ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்தி, ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் தேர்வு, விவசாயிகளின் பிரச்னை உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தால் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது என்று தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரே இவ்வாறு கூறும்போது, திட்டம் குறித்து தமிழக அரசு வாய் திறக்காமல் இருப்பது ஏன் எனத் தெரியவில்லை. தமிழக சட்டப்பேரவையில் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், விவசாயிகளை திரட்டி சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com