ஒரு லோடு மணல் ரூ.50,000, சென்னையில் ரூ.80,000: கட்டுமானப் பணிகள் முடக்கம், 10 லட்சம் பேர் வேலையிழப்பு

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 3 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் ரூ. 50,000-மாக விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ரூ. 80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு லோடு மணல் ரூ.50,000, சென்னையில் ரூ.80,000: கட்டுமானப் பணிகள் முடக்கம், 10 லட்சம் பேர் வேலையிழப்பு

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 3 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் ரூ. 50,000-மாக விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ரூ. 80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதால் தமிழகத்தில் சுமார் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
தமிழகத்தில் 38 குவாரிகள் செயல்பட்டன. நீதிமன்ற கட்டுப்பாடு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டன. பிறகு மே மாதம் கடைசி வாரத்தில் திறக்கப்பட்டு இப்போது திருச்சி, கரூர், விழுப்புரம், அரியலூர், நாமக்கல் மாவட்டங்களில் 30}க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்துவதால் குவாரிகள் காலை 9 மணிக்குத் திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கெல்லாம் மூடப்படுகின்றன. லாரிகள் நேரடியாக ஆற்றுக்குள் சென்று மணல் எடுத்து வருவதால், மொத்த மணல் தேவையில் 25 சதவீதம் அளவுக்கு கூட மணல் கிடைப்பதில்லை. இதனால் மணல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தினமும் 30,000 லோடு மணல் தேவைப்படுகிறது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தினமும் 10,000 லோடு மணல் தேவைப்படுகிறது. ஆனால், தமிழகம் முழுவதுமே சுமார் 8,000 லோடு தான் கிடைக்கிறது. மணல் தட்டுப்பாட்டால் அதன் விலையும் பெருமளவு அதிகரித்துள்ளது.
இதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு லாரி லோடு மணலின்(3 யூனிட்) விலை ரூ.10,000}மாக இருந்தது. தற்போது இது ரூ.50,000}மாக உயர்ந்துள்ளது. சென்னையில் மணல் ரூ.80,000 வரை விற்பனையாகிறது.
10 லட்சம் பேர் வேலையிழப்பு... நாமக்கல்லைச் சேர்ந்த மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி எம்.சக்திவேல் கூறியது:
தமிழகத்தில் மணல் தொழிலை நம்பி 75,000 லாரிகள் உள்ளன. மணல் தட்டுப்பாட்டால் மணல் லாரிகளுக்கு லோடு கிடைக்கவில்லை. இதனால், மணல் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், அதைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் என மொத்தம் 10 லட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
75 சத கட்டுமானப் பணிகள் பாதிப்பு: கட்டுமான பொறியாளர் எஸ்.சத்தியமூர்த்தி கூறியது:
தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டால் 75 சதவீத கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், ஜார்கண்ட், பிகார், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 25,000 தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மணல் தட்டுப்பாட்டால் ஒரு சதுர அடியில் கட்டடம் கட்டுவதற்கான செலவு ரூ.1,700}ல் இருந்து ரூ.3,000 ஆக அதிகரித்துள்ளது. மணல் தட்டுப்பாடு காரணமாக சிமெண்ட், இரும்பு கம்பி, கதவு, ஜன்னல், எலக்ட்ரிக்கல் உள்பட 200}க்கும் மேற்பட்ட மூலப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், அவற்றின் நேரடி தொழிலாளர்கள் மற்றும் மறைமுகத் தொழிலாளர்கள் முடங்கியுள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 20,000 கட்டுமானப் பொறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மணல் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், அபரிமிதமான விலையேற்றத்தைத் தடுக்கவும் மாவட்டந்தோறும் மணல் சேமிப்புக் கிடங்கு ஏற்படுத்தி அதன்மூலம் உரிய நேரத்தில் மணல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்}சாண்ட் தான் தீர்வு: இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
கூடுதலாக மணல் குவாரிகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கேரளம், கர்நாடகம் மாநிலங்களைப்போல தமிழகத்திலும் எம்-சாண்ட் பயன்படுத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இந்த மாற்று குறித்து முதல்வர் அறிவித்துள்ளார், விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
மணல் திருட்டு அதிகரிப்பு: இப்போது மணல் கடுமையான விலையேற்றம் காரணமாக காட்டாறுகளில் உள்ள மணலை எடுக்கத் தொடங்கிவிட்டனர். மணல் குவாரிகள் தனியார் வசம் இருந்த வரை, இதுபோன்ற மணல் திருட்டை அதிகாரிகள் மிக கவனமாக இருந்து தடுத்தனர்.
இப்போது மணல் குவாரிகள் அரசு வசம் சென்றுவிட்டதால், மணல் திருட்டைத் தடுக்க வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்கு ஏற்படவில்லை, இதனால் இரவு நேரங்களில் காட்டாறுகளில் இருந்து மணல் எடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்கிறார் நாமக்கல் மாவட்டம் வலையபட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வருவாய்த்துறை ஊழியர் பி.தங்கராஜ்.
போக்குவரத்துப் பாதிப்பு... மணல் ஏற்ற ஆறுகளுக்கு வரும் லாரிகள் நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைக்கப்படுவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு, நெடுஞ்சாலையோர கிராம மக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. மேலும் வாகன ஓட்டிகளுக்கும், மணல் லாரி ஓட்டுநர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com