தகவல் ஆணையாளர்களைத் தேர்வு செய்ய 29}இல் கூட்டம்: திமுக பங்கேற்குமா?

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள 2 ஆணையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் வரும் வியாழக்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள 2 ஆணையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் வரும் வியாழக்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது. இதற்கான குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் ஓர் உறுப்பினர் என்பதால் இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழகத்தில் மாநில தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் ஆணையத்தில் 2 உறுப்பினர் பதவியிடங்கள் இப்போது காலியாக உள்ளன. 
என்ன நடைமுறை}என்னென்ன அதிகாரங்கள்: முதல்வரைத் தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழு, மாநிலத் தலைமை தகவல் ஆணையாளர் மற்றும் மாநில தகவல் ஆணையாளர்களை தேர்வு செய்து அறிவிக்கிறது. இத் தேர்வுக் குழுவில் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முதல்வரால் நியமிக்கப்படும் மாநில அமைச்சர் ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பர்.
மாநில தலைமை தகவல் ஆணையாளருக்கான மாத ஊதியம், தேர்தல் ஆணையாளருக்கு இணையானது. மாநில தகவல் ஆணையாளருக்கான ஊதியம், மாநில தலைமைச் செயலாளருக்கு இணையானது.
ஊதியம் ஒருபுறம் இருக்க தகவல் ஆணையாளர்களுக்கு நீதிமன்ற நீதிபதிக்கான அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் எந்த நபர்களிடம் இருந்தும் புகார்களையோ அல்லது தகவல் தேவைப்படக் கூடிய மனுக்களையோ பெறலாம். தகவல் அளிக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படாத சூழ்நிலையில் மாநில தகவல் ஆணையாளர் அந்தத் தகவலை பெற்று அளிக்கலாம்.
மனுதாரர் கோரிய தகவலை வழங்க மறுக்கும் பட்சத்தில் அதனை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு ஆணையாளரே அளித்திடலாம். குறித்த காலத்துக்குள் தகவல்கள் கிடைக்காத மனுதாரர்களுக்கு அந்தத் தகவல்களை அளித்திடலாம். துறைகளில் உள்ள தகவல் அலுவலர்கள் அளித்த தகவல்கள் தவறாகவோ அல்லது முழுமையாக இல்லாமலோ இருந்தால் அதனை சரியாக அளித்திடலாம்.
முக்கியத்துவம் வாய்ந்த தகவல் ஆணையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக் குழுக் கூட்டம் வரும் 29} ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கு 52 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அறிவிக்காமலேயே விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகத் தகவல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், 52 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டதாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், தகுதி வாய்ந்தவர்கள் தகவல் ஆணையாளர்களாக தேர்வு செய்யப்படுவார்களா என்ற கே ள்வி எழுந்துள்ளது.
திமுக நிலை என்ன? சட்டப் பேரவை பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள தேர்வுக் குழுக் கூட்டத்தில் திமுக பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வெளிப்படையான தேர்வு முறையை வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com