தொடரும் வகுப்புகள்: குழப்பத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்கள்

மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் முதுநிலை மருத்துவ மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்வது தொடர்பாக பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
தொடரும் வகுப்புகள்: குழப்பத்தில் முதுநிலை மருத்துவ மாணவர்கள்

மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் முதுநிலை மருத்துவ மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்வது தொடர்பாக பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வு நடத்தி வகுப்புகளைத் தொடங்குவதற்கு ஏப்ரல் 30-ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைப் பெற்றவர்களுக்கு மே 2-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கின.
இந்த நிலையில், போனஸ் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதியில் மே 8-ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கியது.
அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசு கிராமப்புறங்களில் பணியாற்றிய மாணவர்களுக்கு 10 முதல் 30 சதவீத போனஸ் மதிப்பெண்ணை அளிக்கும் வகையில் அரசாணையை நிறைவேற்றியது. இதன் மூலம் அரசு மருத்துவர்கள் கலந்தாய்வில் முன்னிலை வகித்தனர். 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1066 இடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை அரசு மருத்துவர்களே பெற்றனர். மேலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாமல், மாநில அரசுக்கு சமர்பிக்கப்பட்ட சுமார் 200 இடங்களையும் அரசு மருத்துவர்களே பெற்றனர்.
மே 31-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஏற்கெனவே வகுப்புகள் தாமதித்ததால் இடங்களைப் பெற்ற மாணவர்கள் உடனுக்குடன் வகுப்பில் சேருவதற்கு அறிவுறுத்தப்பட்டனர். மாணவர்களும் வகுப்புகளுக்கு செல்லத் தொடங்கினர்.
இந்த நிலையில், அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது முறையானது இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவர் சேர்க்கையை ரத்து செய்து ஜூன் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் 3 நாளுக்குள் புதிய தகுதிப்பட்டியலை தயார் செய்து, கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட்டது.
அரசு மேல்முறையீடு: இந்நிலையில் தமிழக அரசு உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்களும் உச்சீநிதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதால், புதிய தகுதிப்பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வாரம் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
வகுப்புகள் தொடர்கிறது: இவ்வாறு முதுநிலை மருத்துவப் படிப்பில் பல்வேறு குழப்பங்கள் நிலவிக் கொண்டிருந்தாலும், வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் நாராயணபாபு கூறியது:
மருத்துவக் கல்வி இயக்ககத்தில் இருந்து உத்தரவு வந்தால் மட்டுமே வகுப்புகள் தடை செய்யப்படும். எவ்வித உத்தரவும் வராத நிலையில், தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு செய்முறை வகுப்புகளே அதிகமாக இருக்கும். மருத்துவமனையில் செய்முறை வகுப்புகளுடனான கலந்துரையாடல் வகுப்புகள் நடைபெறும். வகுப்புகள் எவ்விதத் தொய்வுமின்றி நடைபெற்று வருகிறது என்றார்.
மாணவர்களிடம் குழப்பம்: ஒருவேளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வராதபட்சத்தில் இடங்களை இழக்க வேண்டுமே என்ற குழப்பம் அரசு மருத்துவர்களான மாணவர்கள் மத்தியில் நீடிக்கிறது.
இது தொடர்பாக மாணவர்களிடம் கருத்து கேட்டபோது, அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் 50 சதவீத இடஒதுக்கீடு, நீட் தேர்வு உள்ளிட்டவற்றில் அரசின் நிலைப்பாடு குறித்த அனுபவம் உள்ளதால், மேல்முறையீட்டை முழுவதுமாக நம்பி படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. குழப்பமான மனநிலையிலேயே வகுப்புகளுக்கு சென்று வருகிறோம் என்று தெரிவிக்கின்றனர்.


வகுப்புகள் தொடரும்
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ. எட்வின் ஜோ தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நீதிமன்றத்தில் இருந்து தெளிவான உத்தரவு வரும் வரையில் வகுப்புகள் குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது.
அரசு மருத்துவர்களான முதுநிலை மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் நடைமுறை உள்ளது. எனவே, வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com