பட்டாசு, ஜவுளித் துறைகளுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பட்டாசு, ஜவுளித் துறைகளுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பட்டாசு, ஜவுளித் துறைகளுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பட்டாசு, ஜவுளித் துறைகளுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா முழுவதும் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் நிலையில், அதற்கு பல்வேறு தொழில்துறையினரிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. ஜி.எஸ்.டி வரி விகிதம் மிகவும் அதிகமாக இருப்பதால், பெருமளவில் பாதிப்புகளும், வேலை இழப்புகளும் ஏற்படும் என்று தொழில்துறையினர் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களின் அச்சத்தை புறந்தள்ளிவிட முடியாது.

ஜி.எஸ்.டி எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரியால் கடுமையாக பாதிக்கப்படும் துறைகளில் ஜவுளித் துறை முக்கியமானதாகும். இத்துறையில் துணி நெய்வதற்காக நூல்களை கொள்முதல் செய்வதில் தொடங்கி வெளுத்தல், சாயம் நனைத்தல், தைத்தல் உள்ளிட்ட அனைத்து நிலைகளும் தனித்தனியானதாகக் கருதப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வரி விதிக்கப்படுகிறது. ஐந்து முதல் 18% வரை ஒவ்வொரு கட்டத்திலும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதால் துணிகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இதனால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதைக் கண்டிக்கும் வகையிலும் ஜவுளித் துறைக்கு  ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்களிக்கக் கோரியும் தமிழகத்தில் விசைத்தறிக் கூடங்கள் இன்று ஜூன் 27-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன.

அதேபோல், பட்டாசுகள் மீது 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்க முடியாத ஒன்று. பட்டாசு ஆடம்பரப் பொருள் அல்ல. பட்டாசுக்கு 28% வரி விதிக்கப்பட்டிருப்பதால் பட்டாசுகளின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும். இதனால் பட்டாசுகளின் விற்பனை பெருமளவில் குறையும். பட்டாசு வரிக்கான உள்ளீட்டு வரியை திரும்பப்பெற முடியும் என்பதால் பட்டாசுத் தொழிலுக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்று மத்திய, மாநில அரசுகளின் சார்பில் கூறப்படுகிறது. இது நியாயமற்ற வாதம் ஆகும். பட்டாசுக்கான முதலீட்டில் 30 விழுக்காடு மட்டுமே உள்ளீட்டுப் பொருட்களுக்கான செலவு என்பதாலும்,  70 விழுக்காடு தொழிலாளர்களுக்கான ஊதியம் என்பதாலும் 4% வரியை மட்டுமே திரும்பப்பெற முடியும். அதே நேரத்தில் 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டியிருக்கும். இது பட்டாசுத் தொழிலை முற்றிலுமாக அழித்து விடும். இதை மத்திய, மாநில அரசுகள் உணராதது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி மற்றும் அதையொட்டியப் பகுதிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பட்டாசு ஆலைகள் தான் வாழ்வாதரம் அளிக்கின்றன. 28% ஜி.எஸ்.டி வரி விதிப்பின் காரணமாக பட்டாசு விலைகள் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த வட இந்திய வணிகர்கள் ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர். இதேநிலை நீடித்தால் அடுத்த சில வாரங்களில் பட்டாசு உற்பத்தி முற்றிலுமாக முடங்கி விடும். பட்டாசுகள் மீதான ஜி.எஸ்.டி வரியை 5 விழுக்காடு அல்லது 12 விழுக்காடாக குறைத்தால் மட்டும் தான் பட்டாசுத் தொழிலைக் காப்பாற்ற முடியும். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டாததைக் கண்டித்தும், வரிகளை குறைக்கக் கோரியும் பட்டாசு ஆலைகள் வரும் 30&ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்கின்றன.

இந்தியாவில் ஜவுளித் துறை, பட்டாசு உற்பத்தி ஆகியவை தான் அதிக அளவில் வேலைவாய்ப்பை  வழங்கி வருகின்றன. மத்திய அரசின் வருவாய்ப் பசிக்காக இத்துறைகள் மீது அதிக வரி விதித்தால் இந்த துறைகள் முற்றிலுமாக அழிந்து விடும். இதனால் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இது பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமான செயலாக அமைந்து விடும்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்னைகள் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் இரு முக்கியத் தொழில்துறையினர் போராட்டம் நடத்தும் நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்தி  தீர்வு காண வேண்டிய தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் என்ன ஆனார்? எங்கு போனார்? என்பதே தெரியவில்லை. பதவிகளை காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், தமிழகத்தின் இரு தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். மத்திய அரசும் இவ்விஷயத்தில் நியாயத்தை உணர்ந்து வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com