ஆன்-லைன் விண்ணப்பம் இல்லாததால் கல்லூரிகளில் குவியும் கூட்டம்

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு இணையதள விண்ணப்பம் (ஆன்-லைன்) இல்லாமல், புதிய நடைமுறை பின்பற்றப்படுவதால் நேரடி விண்ணப்ப விநியோகத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு இணையதள விண்ணப்பம் (ஆன்-லைன்) இல்லாமல், புதிய நடைமுறை பின்பற்றப்படுவதால் நேரடி விண்ணப்ப விநியோகத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்தில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
மேலும் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவே மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. இதனால் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக விண்ணப்ப விநியோகத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணி முதலே மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்களைப் பெறுவதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் படையெடுத்தனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட -பழங்குடியின வகுப்பினருக்கான விண்ணப்பங்கள் என தனித்தனியாக 3 கவுன்ட்டர்கள் செயல்பட்டன.
வரைவோலை குழப்பம்: விண்ணப்பக் கட்டணமான ரூ.500-க்கு வரைவோலை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டது. அதில் சில மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பம் என இரண்டுக்கும் சேர்த்து ரூ.1000-க்கு வரைவோலை எடுத்து வந்தனர். இதனை விண்ணப்பம் விநியோகிக்கும் அதிகாரிகள் ஏற்கவில்லை. ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் தனித்தனி வரைவோலை எடுத்து வர மீண்டும் மாணவர்கள் அனுப்பப்பட்டனர்.
விண்ணப்பத்தின் பாகங்கள் இல்லை: விண்ணப்பங்களுடன் தகவல் ஏடு, ஓஎம்ஆர் படிவம் உள்ளிட்ட 7 பாகங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 6 பாகங்கள் மட்டுமே அச்சகத்தில் இருந்து வந்திருந்தன. விடுபட்ட பாகத்தை அச்சகத்தில் இருந்து கொண்டு வந்து விநியோகம் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய நிர்வாக இடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் பிற்பகல் 2.15 மணிக்குதான் தொடங்கியது.
பொதுமக்கள் வாக்குவாதம்: விண்ணப்பம் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகிக்கப்படாததால் அதிகாரிகளுடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் பரிந்துரையின் அடிப்படையில் சிலர் உடனடியாக விண்ணப்பங்களை வாங்கிச் செல்வதாகவும் புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பிட்ட நேரத்துக்கு தொடங்காததால் மாலை 5 மணிக்குப் பின்பும் விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. "
இணையதள விண்ணப்பம்: இந்த ஆண்டு இணையதள விண்ணப்பம் இல்லை என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கத்தைவிட ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பங்களைப் பெறுவதற்கு குவிந்தனர்.
இது தொடர்பாக திருவள்ளூரைச் சேர்ந்த பாஷா என்பவர் கூறியது: கடந்த ஆண்டைப் போல இணையதள விண்ணப்ப முறை இந்த ஆண்டும் இருந்திருந்தால், காலை 8 மணியில் இருந்து காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
விண்ணப்ப விநியோகத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கே போதிய புரிதல் இல்லை என்பதால், எங்களைப் போன்ற பெற்úறோர், மாணவர்களை சரியாக வழிநடத்தவும் அவர்களுக்குத் தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com