சென்னையில் விமான ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் விமான ஆம்புலன்ஸ் சேவை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மைதானத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் விமான ஆம்புலன்ஸ் சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன். உடன் மருத்துவமனையின் துணைத் தல
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மைதானத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் விமான ஆம்புலன்ஸ் சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன். உடன் மருத்துவமனையின் துணைத் தல

அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் விமான ஆம்புலன்ஸ் சேவை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

ஏவியேட்டர்ஸ் ஏர் ரெஸ்க்யூ என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, காரைக்குடி, கரூர், திருச்சி, மைசூரு, தெலங்கானா மாநிலம் கரீம்நகர், ஆந்திர மாநிலம் காக்கிநாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இருந்து விமான ஆம்புலன்ஸ் சேவை மூலம் நோயாளிகளை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வர முடியும்.
அப்பல்லோ மருத்துவமனையின் சார்பில் ஏற்கெனவே ஹைதராபாத், தில்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அப்பல்லோ விமான சேவையின் மூலம் ஓராண்டுக்கு 150 நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். இந்தச் சேவையின் மூலம் 90 சதவீத நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
எவ்வாறு இயங்கும்? மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு நோயாளி குறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டும். அந்த நோயாளிக்கு விமான ஆம்புலன்ஸ் சேவை தேவைப்படும் பட்சத்தில், முதலில் வாகன ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட இடத்துக்கு அனுப்பப்பட்டு, நோயாளி அதில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நிலைப்படுத்தப்படுவார். அதன் பின்பு ஹெலிகாப்டர் இறங்கும் தளத்துக்கு நோயாளி வாகன ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு, விமான ஆம்புலன்ஸில் ஏற்றப்படுவார். ஒரு சமயத்தில் ஒரு நோயாளியை மட்டுமே கொண்டு செல்ல முடியும். விமான ஆம்புலன்ஸில் மருத்துவ உதவிக்கு மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள் இடம்பெற்றிருப்பர்.
கட்டணம் எவ்வளவு?: விமான ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை கொண்டு செல்வதற்கான கட்டணம் மட்டும் ரூ.1.6 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையாகும். மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட அவசர சிகிச்சைகள் தவிர, சிறிய நகரங்களில் மூளைச்சாவு அடைந்தோரிடம் இருந்து உடல்உறுப்புகளை தானம் பெறும் அறுவைச் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு வருதல், ஒரு மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு நோயாளியை மாற்றுதல் உள்ளிட்டவற்றுக்கு இந்தச் சேவை பயன்படும்.
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தச் சேவை தொடங்கப்பட்டது. தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் சேவையைத் தொடங்கி வைத்தார். அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி, துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, ஏவியேட்டர்ஸ் ஏர் ரெஸ்க்யூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கேப்டன் அருண் ஷர்மா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com