ஜவுளி உற்பத்தியாளர்கள் போராட்டம்: ஈரோட்டில் ரூ. 90 கோடி வர்த்தகம் பாதிப்பு

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஈரோட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ. 90 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஈரோட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ. 90 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஜவுளி ரகங்களுக்கு 5 % முதல் 18 % வரையிலும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, விசைத்தறி ஜவுளி ரகங்கள், காட்டன் ஜவுளி ரகங்கள், பருத்தி நூலுக்கு 5 % , ஆயத்த ஆடை ரகங்களுக்கு 12 %, ரேயான், பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு நாடு முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என ஜவுளி சார்ந்த அனைத்து உற்பத்தியாளர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் ஒருகட்டமாக நாடு முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர், விற்பனையாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை முதல் 29-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு வேலை நிறுத்தம், கடையடைப்பு, உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி வணிகர்கள், உற்பத்தியாளர், விற்பனையாளர்களும் 3 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி மொத்த, சில்லறை வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோயில் வீதி, பிருந்தா வீதி, திருநகர் காலனி, கருங்கல்பாளையம், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் மொத்த ஜவுளி உற்பத்தியாளர்களின் கடைகளும், விற்பனையகமும் உள்ளன.
திங்கள்கிழமை முதல் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும், விற்பனை நிறுவனங்களும் 3 நாள்களுக்கு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன. மத்திய அரசின் ஜிஎஸ்டிக்கு கண்டனம் தெரிவித்து, ஈரோடு ஜவுளிக் கடை வீதிகளில் கருப்புக் கொடி ஏற்றி வணிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பை வாபஸ் பெற வலியுறுத்தி, ஈரோடு ஜவுளி வணிகர்கள் சங்கம் (எக்மா) சார்பில் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆயிரக்கணக்கான ஜவுளி வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஈரோடு, ஈஸ்வரன் கோயில் வீதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று ஜிஎஸ்டி வரியைத் தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம் மனு அளித்தனர்.
3 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து எக்மா தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது:
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கள்கிழமை முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை 3 நாள்கள் கடையடைப்பு, உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஜவுளி சார்ந்த வணிகர்கள், உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ. 30 கோடி வீதம் ஜவுளி உற்பத்தி, வர்த்தகம் பாதிக்கப்பட்டு 3 நாள்களுக்கு ரூ. 90 கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி, விற்பனை பாதிக்கப்படும் என்றார்.
இதேபோல தமிழ்நாடு விசைத்தறி சம்மேளனம் சார்பில் விசைத்தறிக் கூடங்களும் 3 நாள்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாள்களுக்கு விசைத்தறிக் கூடங்கள், ஆட்டோ லூம்கள் இயங்காது.
விசைத்தறியுடன் அதை சார்ந்த துணி பதனிடும் ஆலை, நூற்பாலை, பின்னலாடை, டையிங், வார்ப்பிங், சைசிங், காலண்டரிங் ஆலைகளும் இயங்காது. தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 5 லட்சம் விசைத்தறியாளர்களும் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com