ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் இரண்டாவது நாளாக போராட்டம்

ஜவுளி மற்றும் விசைத்தறி உற்பத்தி, விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரோட்டில் 2}ஆவது நாளாக புதன்கிழமை ஜவுளி உற்பத்தியாளர்கள் கடையடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
ஈரோடு, கடை வீதியில் மூடப்பட்டிருந்த ஜவுளிக்கடைகள்.
ஈரோடு, கடை வீதியில் மூடப்பட்டிருந்த ஜவுளிக்கடைகள்.

ஜவுளி மற்றும் விசைத்தறி உற்பத்தி, விற்பனைக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து, ஈரோட்டில் 2}ஆவது நாளாக புதன்கிழமை ஜவுளி உற்பத்தியாளர்கள் கடையடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதன் காரணமாக ஈரோட்டில் பரபரப்பாகக் காணப்படும் முக்கிய வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
நாடு முழுவதும் ஜவுளி ரகங்களுக்கு 5 முதல் 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு, ஜூலை 1}ம் தேதி முதல் இந்த வரி விதிப்பை அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி விசைத்தறி ஜவுளி ரகங்கள், காட்டன் ஜவுளி ரகங்கள் மற்றும் பருத்தி நூலுக்கு 5 சதவீதமும், ஆயத்த ஆடை ரகங்களுக்கு 12 சதவீதமும், ரேயான், பாலியஸ்டர் போன்ற செயற்கை இழைகளுக்கு 18 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட உள்ளது.
ஜவுளித் துணிகளுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிவிதிப்பைக் கண்டித்து நாடு முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர், விற்பனையாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜூன் 27 முதல் 29}ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாள்களுக்கு வேலை நிறுத்தம், கடையடைப்புப் போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை முதல் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள், விசைத்தறிக் கூடங்கள் கடையடைப்புப் போராட்டத்தைத் தொடங்கின. ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மொத்த ஜவுளி உற்பத்திக் கடைகள், விசைத்தறிக் கூடங்கள், ஆயத்த ஆடைகள், நூல் உற்பத்திக் கடைகள், சாய பதனிடுவோர் மற்றும் ஜவுளி சார்ந்த நிறுவனங்கள், கடைகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோயில் வீதி, திருவேங்கடசாமி வீதி, பிருந்தா வீதி, திருநகர் காலனி, கருங்கல்பாளையம், அசோகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மொத்த ஜவுளி உற்பத்தியாளர்களின் கடைகளும், விற்பனைக் கடைகளும் 2}வது நாளாக புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக, இந்த வீதிகள் நேற்று வெறிச்சோடிக் கிடந்தன. கடந்த 2 நாள்களில் ரூ. 60 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக ஜவுளி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, ஈரோடு ஜவுளி வணிகர்கள் சங்கம் (எக்மா) சார்பில் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சிதம்பர சரவணன் தலைமையில் ஜவுளி வணிக நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதியில் இருந்து சூளையில் செயல்பட்டு வரும் மத்திய கலால் வரி அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று கலால் வரித்துறை இயக்குநர் ரமேஷிடம், ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி மனு அளித்தனர்.
வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, ஜவுளித் தொழிலாளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள், பதனிடும் ஆலைத் தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com