பொருளாதாரம் மேம்பட நதிகளை இணைக்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நாட்டின் பொருளாதாரம் மேம்பட நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினார்.
பொருளாதாரம் மேம்பட நதிகளை இணைக்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நாட்டின் பொருளாதாரம் மேம்பட நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினார்.
கடித விவரம்:
மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் இணைப்புப் பிரச்னைகளால் தமிழகம் இன்றைக்கு மிக மோசமான சூழலை அனுபவித்து வருகிறது. தமிழக விவசாயிகள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்துக்குக் கிடைக்கும் நீர்ப்பாசன ஆதாரங்களை முடக்குவதும், மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் ஒப்பந்தங்களை மீறி அநியாயமாகத் தடுப்பணைகள் கட்டுவதும் அண்டை மாநிலங்களின் எதேச்சதிகாரமான போக்காக மாறி வருகிறது.
தற்போதைய சூழலில், நாட்டின் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற நதிநீர் இணைப்பு மட்டுமே காலத்தின் கட்டாயம். அதுவே நீண்ட காலத்தீர்வாகவும் அமையும். 1972 -இல் மத்திய நீராதார அமைச்சர் கே. எல். ராவ் தொலைநோக்குப் பார்வையுடன் முன் வைத்த நதி நீர் இணைப்புத் திட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமான தீர்வை இதுவரை எட்டவில்லை. இடையில் நதி நீர் இணைப்புக்கென உருவாக்கப்பட்ட சிறப்புப் பணிக் குழு கலைக்கப்பட்டு, இறுதியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்தில் ஒரு பிரிவின் கீழ் ஒப்படைக்கப்பட்ட நிலைதான் உருவானது. திமுக தலைவர் கருணாநிதியும் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் இருமுறை நதிநீர் இணைப்புத் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு நதி நீர் இணைப்பு வறட்சி பாதிப்பு மண்டலங்களில் வசிக்கும் மக்களைப் பசியிலிருந்து காப்பாற்றவும், வெள்ளப் பெருக்கெடுக்கும் பகுதிகளைச் சார்ந்த மக்களை அழிவில் இருந்து பாதுகாக்கவும் உதவும் என்று 2012-இல் நதி நீர் இணைப்புத் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தீர்ப்பில், நதி நீர் இணைப்புத் திட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட அந்த வெள்ளிக்கோடுகள் போன்ற முக்கிய வரிகளில் நதி நீர் இணைப்புத் திட்டத்தின் முழு அவசியமும் பிரதிபலிக்கிறது.
நாட்டின் கனவுத் திட்டமான நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற மாநிலங்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட வேண்டிய சிறப்புக் குழு பற்றியெல்லாம் விளக்கமாக அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. அதனையொட்டி, தங்களுடைய தலைமையிலான ஆற்றல் மிகு அரசு 2014 ஜூலை 16-இல் சிறப்புக்குழு அமைத்து கடைசியாக 2016 பிப்ரவரி 2-இல் நடைபெற்ற கூட்டத்துடன் இதுவரை 8 கூட்டங்களை நதி நீர் இணைப்புத் திட்டங்கள் குறித்து கூட்டி விவாதித்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது.
ஆனால், நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு அதிமுக்கியத்துவம் அளிப்பதோடு, மாநிலத்துக்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் தமிழக நதி நீர் இணைப்புத் திட்டங்களை அதிவேகமாக நிறைவேற்ற வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை இணைப்பதோடு, மாநிலங்களுக்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களையும் நிறைவேற்ற தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும். நதி நீர் இணைப்புத் திட்டம் தேசத்துக்கான, தேசத்தால் செயல்படுத்தப்பட வேண்டிய தேசியத் திட்டம். இதனால் தமிழக விவசாயிகள் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கும், பல்வேறு தரப்பினருக்கும் மிகுந்த பயனளிக்கும்.
இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் , மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்னைகள் தீர்வதோடு, அண்டை மாநிலங்களுக்கு இடையில் அமைதி நிலவி, தேசிய ஒருமைப்பாட்டினை மேலும் வலுவாக்கவும், தேசிய வளர்ச்சி மற்றும் தேசியப் பொருளாதாரம் மேம்படவும் மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com