காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவோம்: முதல்வர் உறுதி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவோம்: முதல்வர் உறுதி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் }சிறுதுறைமுகங்கள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அவர் பேசியது:
நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு கடிதங்கள் மூலமும், பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
படுகை மாநிலங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு உகந்தவை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு ஜூலை 11 }ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்தப்படும்.
86,355 விவசாயிகளுக்குப் பலன்: குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. மாநிலத்திலுள்ள நீர் வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறைகளின் பராமரிப்பிலுள்ள 42,649 நீர்நிலைகளில் வண்டல்மண் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. 36,345 நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 4.41 மில்லியன் கனமீட்டர் வண்டல் மண் அகற்றப்பட்டு, அதன்மூலம் 86,355 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.
அத்திக்கடவு}அவினாசி: காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீரை நீரேற்று பாசன முறையின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அத்திக்கடவு}அவினாசி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 31 நீர்வள ஆதாரத் துறை ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 630 நீர்நிலைகள் பயன்பெறும். இந்தத் திட்டத்தால் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்காக நிகழ் நிதியாண்டில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com