குட்கா விவகாரம்: திமுக - காங்கிரஸ் வெளிநடப்பு

குட்கா விற்பனைக்காக அமைச்சர், காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக அவையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படாததைக் கண்டித்து திமுக, காங்கிரஸ்

குட்கா விற்பனைக்காக அமைச்சர், காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக அவையில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படாததைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையிலிருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8 -ஆம் தேதி, தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்தவர்களிடம் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது என்றார்.
அப்போது பேரவைத் தலைவர் தனபால் குறுக்கிட்டுக் கூறியது: இந்த விவகாரம் தொடர்பாக காலை 9.30 மணியளவில்தான் என் அறையில் அறிவிப்பு கொடுத்தீர்கள். அதனால், இப்போது எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.
மு.க.ஸ்டாலின்: இது முக்கியப் பிரச்னை.
அப்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து குரல் கொடுத்தனர். குட்கா விவகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் காண்பித்தனர்.
பேரவைத் தலைவர்: பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வெளியான செய்திகளை வைத்துக் கொண்டு அவையில் பேச முடியாது என ஏற்கெனவே தீர்ப்பு கூறியுள்ளேன். இதனால் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரம் கொடுத்தால் பேச அனுமதிக்கிறேன். ஆதாரம் இல்லாமல் பேச முற்படுவது சரியான அணுகுமுறை இல்லை என்றார்.
அப்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் அமைச்சர் ராஜிநாமா செய்ய வேண்டும் முழக்கமிட்டனர்.
பேரவைத் தலைவர்: இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பதிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அனுமதிக்கிறேன். ஆனால், குற்றம்சாட்டும் வகையில் பேசினால், அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுவேன் என்றார்.
அதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசினார். ஆனால், அவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவையிலேயே 5 நிமிஷங்களுக்கு மேலாக முழக்கமிட்டனர்.
பேரவைத் தலைவர்: சட்டப்பேரவையில் இருந்து ஏற்கெனவே ஒரு முறை அவைக்காவலர்களால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரண்டாம் முறையாக வெளியேற்றபட்டால் என்ன நடவடிக்கை என்பதை அனைவரும் அறிவீர்கள். (இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது.) அதனால், அவையில் அமைதியாக அமருங்கள் என்றார்.
எனினும், திமுகவினர் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.
மு.க.ஸ்டாலின்: ஊரைக் காக்கக்கூடிய ஒரு பிரச்னையை நான் அவையில் எழுப்பி, அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி தராததால் அதைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
அதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரஸ் வெளிநடப்பு: சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி எழுந்து இதே விவகாரம் தொடர்பாக பேச முற்பட்டதுடன், அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஆட்சியை நடத்துங்கள் என்றார்.
அதற்கு பேரவைத் தலைவர் தனபால், அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறியதற்கு நன்றி. இதோடு அமருங்கள் என்றார்.
ஆனால், கே.ஆர்.ராமசாமி தொடர்ந்து அதே விவகாரம் குறித்து பேச முற்பட்டார். அதற்கு அனுமதிக் கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபுபக்கரும் இதே பிரச்னைக்காக வெளிநடப்பு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com