செய்யது குழும நிறுவனம் மீது வருமான வரி ஏய்ப்பு புகார்

செய்யது பீடி குழும நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், 6 மாநிலங்களில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலைகள்,அலுவலகங்கள், நிறுவனங்கள் என 63 இடங்களில் வருமான
செய்யது குழும நிறுவனம் மீது வருமான வரி ஏய்ப்பு புகார்

செய்யது பீடி குழும நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில், 6 மாநிலங்களில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஆலைகள்,அலுவலகங்கள், நிறுவனங்கள் என 63 இடங்களில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர்.
இது குறித்த விவரம்:
திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் செய்யது பீடி குழும நிறுவனங்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளன. முதலில் பீடி தயாரிப்பில் ஈடுபட்ட இந்த நிறுவனம், இப்போது பருத்தி நூற்பாலை, நிதி நிறுவனம், காற்றாலை நிறுவனம், ஆயத்த ஆடை நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனம் அண்மைக்காலமாக முறையாக வரி செலுத்தவில்லை என்றும், வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதேபோல முதலீடுகளுக்கும் சரியான கணக்குகளையும், ஆவணங்களையும் காட்டவில்லை எனவும் வருமான வரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் அந்த நிறுவனத்தில் புதன்கிழமை சோதனை நடத்தினர். சென்னை பட்டினப்பாக்கம் சாய்நகர் கற்பகம் அவென்யூ 4ஆவது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான யூசுப் மீரான் வீட்டில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை காலை 7 மணிக்கு சோதனை நடத்தச் சென்றனர். அங்கு வீட்டின் கதவுகளை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தத் தொடங்கினர்.
வருமான வரித்துறை சோதனையையொட்டி, வீட்டில் இருந்த யாரையும் வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதேபோல சேப்பாக்கம் பெல்ஸ் சாலையில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகம், கிட்டங்கி ஆகியவற்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர்.
63 இடங்களில் சோதனை: திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள விடுதி, நிதி நிறுவன அலுவலகம், மூன்றடைப்பு செய்யது நகரில் உள்ள பருத்தி நூற்பாலை, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம், பாளையங்கோட்டையில் உள்ள செய்யது குழும நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடு என பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டனர்.
இதேபோல கோவை, மதுரை, திருச்சி, சேலம் என அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், கிட்டங்கிகள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மேலும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள செய்யது குழுமத்துக்கு சொந்தமான ஆலைகளிலும்,அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்கின்றனர்.
இந்தச் சோதனை தமிழகம் உள்பட மொத்தம் 6 மாநிலங்களில் 63 இடங்களில் நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சோதனை வருமான வரித்துறையைச் சேர்ந்த சுமார் 300 அதிகாரிகள் 60 குழுக்களாக பிரிந்து சென்று நடத்துகின்றனர். சோதனை நடைபெற்ற முக்கியமான இடங்களில் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் சோதனையின் முடிவில்ôதான், வரி ஏய்ப்பு குறித்த முழுமையான தகவல்கள் தெரிய வரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com