புதிய தடுப்பணைகள்-தடுப்புச் சுவர்கள்: 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடியில் அமைக்கப்படும்: பழனிசாமி

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடியில் புதிய தடுப்பணைகள், தடுப்புச் சுவர்கள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
புதிய தடுப்பணைகள்-தடுப்புச் சுவர்கள்: 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடியில் அமைக்கப்படும்: பழனிசாமி

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடியில் புதிய தடுப்பணைகள், தடுப்புச் சுவர்கள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள் துறைகளின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:
நிலத்தடி நீரை செறிவூட்டவும், ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்லவும், புதிய தடுப்பணைகள், நிலத்தடி கீழ் தடுப்புச்சுவர்கள், அணைக்கட்டுகள் ஆகியன ரூ.1,000 கோடி மதிப்பில் 3 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழாண்டில் ரூ.350 கோடி மதிப்பில் 75 இடங்களில் தடுப்பணைகள், நிலத்தடி கீழ் தடுப்புச்சுவர்களும், 10 இடங்களில் அணைக்கட்டுகளும் கட்டப்படும்.
கடைமடை ரெகுலேட்டர்: நாகப்பட்டினம் சீர்காழி வட்டம் புதுப்பட்டினம் கிராமம் கிட்டியணை உப்பனாற்றில் ரூ.10 கோடி மதிப்பில் கடைமடை ரெகுலேட்டர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
சேலம் எடப்பாடி, சங்ககிரியில் மேட்டூர் கிழக்குக்கரை, திருப்பூர் உடுமலைப்பேட்டை பிரதானக் கால்வாய், கிளைக் கால்வாய்கள், திருவாரூர் வடவாறு நீட்டிப்புக் கால்வாய் ஆகியவற்றில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பாலக்காடு தூணக்கடவு அணையின் முன்னணி வாய்க்காலினைப் புனரமைத்தல், நீர் சீராக்கியை மின்மயமாக்குதல் போன்ற பணிகள் செய்யப்படும். ஈரோடு கோபிச்செட்டிபாளையம் கணக்கம்பாளையம் கிராமத்தில் காட்டோடையின் குறுக்கே புதிய ஏரியும், திண்டுக்கல் கொம்பேறிபட்டி கிராமத்தில் கன்னிமார் ஓடையின் குறுக்கே புதிதாக கசிவு நீர்க்குட்டை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
புனரமைக்கும் பணிகள்: ராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றின் குறுக்கே பார்த்திபனூர் ரெகுலேட்டர் அமைக்கப்படும்., கரூர் மாவட்டம் புதிய கட்டளை உயர்நிலை கால்வாய், கட்டளை உயர்நிலைக் கால்வாயில் பழுதடைந்துள்ள மரக்கதகவுகளுக்குப் பதிலாக இரும்பு திருகு கதவுகளாகவும் மாற்றம் செய்யப்படும். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் பிரிவுகளில் பழுதடைந்த கதவுகள் புனரமைக்கப்படும்.
ஏரிகள் புனரமைப்பு: சென்னை மாவட்டம் வேளச்சேரி ஏரி, சேலம் மாவட்டம் சரபங்காநதி உப வடிநிலத்தில் உள்ள எட்டு ஏரிகள் புனரமைத்து சீர் செய்யப்படும். மேலும், ஏழு நிலத்தடி நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்படும்.
திருவாரூர் மாவட்டம் வடுவூர் அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள வடுவூர் ஏரி தூர்வாரப்படும். மூவர் கோட்டை கிராமத்தில் சித்தேரி ஏரிக்கு நீர் வழங்க ஊட்டுக் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். மதுரை மாவட்டம் வண்டியூர் கண்மாய், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள 9 முன்னாள் ஜமீன் கண்மாய்கள் ஆகியன புனரமைக்கப்படும்.
கடலரிப்பு தடுப்புச் சுவர்: கடலரிப்பைத் தடுக்கும் வகையில், கன்னியாகுமரி பூத்துறையில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியும், சின்னத்துறையில் கடலரிப்பு தடுப்புச் சுவரை சீரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com