ஜிஎஸ்டியை கொண்டு வந்ததே திமுக, காங்கிரஸ் தான்: தம்பிதுரை குற்றச்சாட்டு

ஜிஎஸ்டியை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான் என்று மக்களவை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
ஜிஎஸ்டியை கொண்டு வந்ததே திமுக, காங்கிரஸ் தான்: தம்பிதுரை குற்றச்சாட்டு

சென்னை: ஜிஎஸ்டியை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான் என்று மக்களவை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்வதற்காக, ஜிஎஸ்டி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டமானது ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் வரும் 30-ஆம் தேதி இரவு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மத்திய அரசு இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 30) ஏற்பாடு செய்துள்ள சிறப்புக் கூட்டத்தைப் புறக்கணிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

ஆனால், ஜிஎஸ்டி சட்டமானது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது என்பதால், அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்வதே சிறப்பாக இருக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒரு சாரர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தம்பிதுரை, ஜிஎஸ்டியை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது குறித்து கருத்து தெரிவித்தார்.

அப்போது, ஜிஎஸ்டி மசோதாவை கொண்டு வந்ததே திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தான். இப்போது அவர்களே அதனை குறை கூறுவது வேடிக்கையாக உள்ளது. உரிமைகள் பறிபோக காரணமாக இருந்தவர்களே திமுக மற்றும் காங்கிரஸ் தான் என்றவர் ஜெயலலிதாவின் கோரிக்கைகளை ஏற்று சில மாற்றங்களை மத்திய அரசு செய்ததாலேயே ஜிஎஸ்டியை ஆதரித்தோம்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அனைவரும் இணைந்து கொண்டாடுகிறோம். நாங்கள் செல்லும் பாதை சரியான பாதை. விரைவில் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தை மீட்டெடுப்போம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com