மே 14க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம்: மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் மே மாதம் 14ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மே 14க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம்: மாநில தேர்தல் ஆணையம்


சென்னை: தமிழகத்தில் மே மாதம் 14ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்கும்படி உத்தரவிடக் கோரி பாடம் நாராயணன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், இது குறித்து  ஏப்ரல் 3ம் தேதிக்குள் பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் தலைமையிலான  அமர்வு முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், மே 14ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பது சிரமம் என்று தெரிவித்தார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றின் அடிப்படையில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

திமுக தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வந்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து முழு விவரத்தை தனி மனுவாக சமர்ப்பிக்கக் கூறும், தமிழக அரசின் பஞ்சாயத்து (தேர்தல்) சட்டம் 1995, விதி 26-இல் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

1-9-2006-இல் வெளியிடப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பாணையின் அடிப்படையில், குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிடாதவர்களின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்ய வேண்டும்.

வேட்பாளர்களின் குற்றப் பின்னணி பற்றிய விவரங்களை வாக்காளர்கள் அறியும் வகையில், தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் கடிதம் வாயிலாகத் தெரிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com