ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் முடிவு

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அதேவேளையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் முடிவு

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அதேவேளையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இணைந்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முடிவு எடுக்க திட்டமிட்டோம்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் முடிவெடுத்தது. அதேநேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது.
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதில், எங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மாறுபட்ட கருத்து இருந்தது. ஆனால், தேர்தலில் போட்டியிடுவது என்பதில் மார்க்சிஸ்ட் உறுதியாக இருந்தது. இதனால் மார்க்சிஸ்ட் கட்சியுடனான தோழமையிலும், நட்புறவிலும் எந்தவித பாதிப்பும் இல்லை.
ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவதால் எந்தப் பயனும் இல்லை. அதற்காக தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித அச்சமும் இல்லை. தற்போது, இந்திய அளவில் மதவாத சக்திகள் விரிந்து பரந்து தமது மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதில் தீவிரமாக உள்ளன. குறிப்பாக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா உள்ளிட்ட மதவாத சக்திகள் வலுப்பெற்றுள்ளது கவலை அளிக்கிறது.
இதனைக் கருத்தில் கொண்டு ஜனநாயகச் சக்திகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டுமென்பதை இந்த சூழலில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். தமிழகத்திலும் மதவாத, சாதியவாத சக்திகள் வேரூன்றுவதற்குக் குறிவைத்து வேலைகள் செய்து வருகின்றன.
இதனை எதிர்கொள்ள வேண்டிய சவாலும் ஏற்பட்டுள்ளது. மதவாத சக்திகளுக்கு எதிராக ஒத்த கருத்துடைய அனைவரும் அணி திரள வேண்டும் என திருமாவளவன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று முடிவு எடுத்திருக்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியோடு சேர்ந்து மதவாத சக்திகளுக்கு எதிராக அணி திரட்ட திட்டமிட்டுள்ளோம் என்றார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மக்கள் நலக்கூட்டணி தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்குப் பின்னர், விஜயகாந்த் கூட்டணியை விட்டு வெளியேறிய நிலையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் அக்கூட்டணியிலிருந்து விலகினார்.
இதன் காரணமாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்
போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நலக் கூட்டியக்கத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.கே.நகர் தொகுதியில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து தனது வேட்பாளரையும் அறிவித்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.-தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் மக்கள் நலக்கூட்டணியிடம் ஆதரவை கேட்டிருந்தன. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com