சென்னைத் துறைமுகத்தில் ரூ.10 கோடிக்கு 1.32 லட்சம் டன் இரும்புத் தாது விற்பனை

சென்னைத் துறைமுகத்தில் சுமார் ரூ.10.5 கோடிக்கு 1.32 லட்சம் மெட்ரிக் டன் இரும்புத்தாது விற்பனை நடைபெற்றுள்ளது.
சென்னைத் துறைமுகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள இரும்புத் தாது.
சென்னைத் துறைமுகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள இரும்புத் தாது.

சென்னைத் துறைமுகத்தில் சுமார் ரூ.10.5 கோடிக்கு 1.32 லட்சம் மெட்ரிக் டன் இரும்புத்தாது விற்பனை நடைபெற்றுள்ளது. சந்தை விலையுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்தவிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இதில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என புகார் எழுந்துள்ளது.

சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 18 மில்லியன் டன் நிலக்கரி, இரும்புத்தாது கையாளப்பட்டு வந்தது. இதனால் சென்னை மாநகரத்தின் பெரும்பகுதி மாசடைந்து வருகிறது எனத் தொடரப்பட்ட வழக்கில் இவற்றைக் கையாள சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே 2011-ல் தடை விதித்தது. இதனையடுத்து நிலக்கரி, இரும்புத் தாது கையாள்வதை கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து சென்னைத் துறைமுகம் நிறுத்திவிட்டது. இதனால் சென்னைத் துறைமுகத்தின் வருவாயில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தேங்கிய 1.32 லட்சம் டன் இரும்புத்தாது: கர்நாடகம், பிகார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு வரப்பட்ட இரும்புத்தாது பல ஆண்டுகளாக சென்னைத் துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் இரும்புத்தாது கையாளும் சிறப்பு கப்பல்தளம் அமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு கையாளப்படும்போது சிதறும் அல்லது மீதமாகும் இரும்புத்தாது படிப்படியாகத் தேங்கிவிடும். இது போன்ற சரக்குகள் துறைமுகத்திற்குச் சொந்தமாகிவிடும். இவ்வாறு பல ஆண்டுகளாகத் தேங்கிய இரும்புத்தாதுவின் தற்போதைய மொத்த இருப்பு சுமார் 1.32 லட்சம் டன். இரும்புத்தாது கையாள்வது நிறுத்தப்பட்டதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் இருப்பு வைத்திருந்த இரும்புத்தாது மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.
சந்தை விலை ரூ.5,800, ஏலத்திலோ ரூ.787: தாதுவில் உள்ள இரும்பின் சதவீதத்தைக் கொண்டு மேக்னடைட், ஹேமடைட், லிமோடைட், சைடெரைட் ஆகிய நான்கு வகைகளாகக் பிரிக்கப்படுகிறது. இதில் உயர்வகை இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தேங்கிய 1.32 லட்சம் டன் இரும்புத் தாது ஏற்றுமதித் தரம் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த இந்த இரும்புத் தாதுவை விற்பனை செய்ய கடந்த டிசம்பர் 27-ல் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டது. மத்திய அரசு நிறுவனமான எம்.எஸ்.டி.சி. லிமிடெட் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஏலத்தில் இறுதிவரை 7 பேர் கலந்து கொண்டதாகவும், சென்னை தனியார் நிறுவனம் ஒரு டன்னுக்கான விலை ரூ.787 வீதம் ஏலத்தில் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. 6 மாதங்களுக்குள் இரும்புத் தாதுவை சென்னைத் துறைமுகத்திலிருந்து அகற்ற இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது இதே நிறுவனம் தில்லியைச் சேர்ந்த இரும்பு உருக்காலைக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி ஒரு டன் உயர் ரக இரும்புத்தாது 84 அமெரிக்க டாலராக (சுமார் ரூ.5,600) உள்ளது. இதுவே 2014-இல் 125 டாலராக இருந்துள்ளது.
இந்நிலையில் மிகக் குறைந்த கொள்முதல் ஏல விலை, ஒட்டுமொத்த இருப்பு உள்ளிட்டவைகளை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதன் பின்னணியில் அதிகார வர்க்கத்தினர் உள்ளதாகவும் துறைமுக வட்டாரத்தில் புகார் கூறப்படுகிறது. ஏற்கெனவே இத்துறைமுகம் தொடர்ந்து வருவாய் பாதிப்பில் சிக்கித் தவித்து வரும் நிலையில் இரும்புத்தாது ஏல விற்பனை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com