13 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்டது சோழவரம் ஏரி

திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஏரி கடந்த 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு முழுவதுமாக தண்ணீர் வற்றிய நிலையில் உள்ளது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்டது சோழவரம் ஏரி

திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஏரி கடந்த 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு முழுவதுமாக தண்ணீர் வற்றிய நிலையில் உள்ளது.
சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 ஏரிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றின் மொத்தக் கொள்ளளவு 11 டிஎம்சி (1,000 மில்லியன் கன அடி 1 டிஎம்சி) ஆகும்.
தற்போது இந்த நான்கு ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 1,491 மில்லியன் கன அடி (1.4 டிஎம்சி) தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதனைக் கொண்டு இன்னும் சில நாள்களுக்கு மட்டுமே குடிநீர்த் தேவையைச் சமாளிக்க முடியும்.
இந்நிலையில் சோழவரம் ஏரி கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வறண்டுள்ளது. இப்போது வெறும் 6 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பில் உள்ளது. ஏரியில் மொத்தம் 881 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.
சோழவரம் ஏரியில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் புழல் ஏரிக்கு விநாடிக்கு 60 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. ஏரியில் தண்ணீர் தொடர்ந்து வற்றி வருவதால் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதையடுத்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது தடைபட்டுள்ளது. ஏரியில் சில இடங்களில் மட்டுமே குறைந்தளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்தத் தண்ணீரை கால்வாய் வெட்டி மோட்டார் மூலம் மீண்டும் புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்ப முடியுமா என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 380 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் 10 கன அடியும் தண்ணீர் அனுப்பப்படுகிறது. புழல் ஏரிக்கு சோழவரம், பூண்டி ஏரிகளிலிருந்து நீர்வரத்து இல்லாததால் குறைந்த அளவு தண்ணீரே இருப்பு உள்ளது.
சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றும் 4 ஏரிகளிலும் மிகவும் குறைவான அளவே தண்ணீர் உள்ளதால் குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கல்குவாரி குட்டைகளில் உள்ள நீர், விவசாயக் கிணறுகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடிவு செய்து உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com