ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

அரசு அலுவலகங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு அலுவலகங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, வழக்குரைஞர் கே.பாலு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், அண்மையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவை குற்றவாளி என்று சுட்டிக் காட்டியுள்ளது. தற்போது பொறுப்பேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஜெயலலிதா பெயரில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அந்தத் திட்டங்களில், ஜெயலலிதாவின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, அவர் சார்ந்த கட்சியினர் அம்மா என அழைக்கின்றனர்.
இந்நிலையில், மறைந்த முதல்வருக்கு அரசு பணத்தில் நினைவிடம் கட்டவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இது தொடர்பாகக் கடந்த 20-ஆம் தேதி அளித்த மனுவுக்கு இதுவரை எந்தவித பதிலும் இல்லை.
எனவே, அரசு பணத்தில் ஜெயலலிதாவுக்கு பொது இடத்தில் நினைவிடம் கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் அரசு அலுவலகங்கள், அரசுத் திட்டங்களில் அவரது பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பொது இடங்கள் மற்றும் கட்சி அலுவலகங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படம் இடம்பெறும் போது அவை குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஆனால், இந்த வழக்கில் மனுதாரர்கள் எழுப்பியிருக்கும் விஷயத்துக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டு, மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு இருந்தது.
பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை இவ்வழந்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா வழக்கு முடிந்து விட்டது: அதில், மனுதாரர் கோரிக்கை தவறானது. ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நிலுவையில் இருந்தபோது, ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார். அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. அவருக்கு இந்த வழக்கில் தண்டனை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ஆகையால், முதல்வரான ஜெயலலிதாவைக் குறிப்பிடும் வகையில் அவரது பெயரையோ அல்லது புகைப்படத்தையோ அரசின் நலத் திட்டங்களில் பயன்படுத்துவதில் தவறு இல்லை.
ஏற்கெனவே முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் அவரது புகைப்படம் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், ராஜாஜி, பெரியார், அம்பேத்கார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், வ.உ.சிதம்பரனார், காயிதே மில்லத், இந்திரா காந்தி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரின் படங்களை வைத்துக்கொள்ள ஏற்கெனவே அனுமதியளிக்கப்பட்டு அரசாணை உள்ளது.
அந்த அடிப்படையில்தான் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமும் வைக்கப்பட்டுள்ளது. எனவே இதில் எந்த விதிமீறலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கில் அரசு தலைமை வழக்குரைஞர் ஆஜராக இருப்பதாகக் கூறி, கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com