நியூட்ரினோ ஆய்வகத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி ரத்து

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கியிருந்த அனுமதியை திங்கள்கிழமை ரத்து செய்து தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட அம்பரப்பர் மலை.
தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட அம்பரப்பர் மலை.

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கியிருந்த அனுமதியை திங்கள்கிழமை ரத்து செய்து தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தேவாரம் அருகே பொட்டிப்புரத்தை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுரம் அம்பரப்பர் மலையில், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் பணிகளை கடந்த 2015, ஜனவரி மாதம் மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில், நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் சுற்றுச் சூழல் மற்றும் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என, பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், நியூட்ரினோ ஆய்வகத்துக்கு தேசிய வன விலங்கு வாரியத்தின் அனுமதி பெறவில்லை என்றும், சுற்றுச்சூழல் ஆய்வு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட வில்லை என்றும் கூறி, நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் வழங்கியிருந்த அனுமதியை ரத்து செய்து, தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டி.ரங்கநாதபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் திருப்பதி வாசகன் கூறியது: மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்த கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளுக்கு முரணாக, பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இத்திட்டத்தால் கேரள வனப் பகுதியில் உள்ள வன விலங்குகளின் இடப் பெயர்ச்சிக்கு தடை ஏற்படும். கால்நடை மேய்ச்சல் உரிமை, நிலத்தடி நீராதாரம், விவசாயம் பாதிக்கும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. எனவே, பொட்டிப்புரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றார்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழு நிர்வாகி தேவாரம் முருகன் கூறியது:
நியூட்ரினோ ஆய்வகத் திட்டம், அணுக்கழிவு சேமிப்பு திட்டமாக இருக்கும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. சூற்றுச் சூழல் பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தும் நியூட்ரினோ ஆய்வகம் திட்டத்துக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com