ரேஷனில் தடையின்றிப் பொருள்கள் விநியோகம்: அமைச்சர் காமராஜ்

நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கும் பொருள்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படாது என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
ரேஷனில் தடையின்றிப் பொருள்கள் விநியோகம்: அமைச்சர் காமராஜ்

நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கும் பொருள்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படாது என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் டி. செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி) பங்கேற்றுப் பேசினார். அப்போது நடந்த விவாதம்:-
டி.செங்குட்டுவன் (திமுக): வரியில்லாத பட்ஜெட் என்று சொல்கிறீர்கள். ஆனால், பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்: பேருந்துக் கட்டணம் எங்கும் உயர்த்தப்படவில்லை. அதற்கான ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிதியமைச்சர் ஜெயகுமார்: கச்சா எண்ணெய் விலை இப்போது மிகவும் குறைந்து விட்டது. இந்தச் சூழ்நிலையில், பெட்ரோல்-டீசலுக்கான வரிகள் ஏதும் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படவே இல்லை. இப்போதைய உயர்வும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகும்.
செங்குட்டுவன்: நியாய விலைக் கடைகளில் பருப்பு வகைகள், பாமாயில் ஆகியன கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படவே இல்லை.
அமைச்சர் காமராஜ்: சிறப்புப் பொது விநியோகத் திட்டம் கடந்த டிசம்பருடன் முடிவடைந்தது. இந்தத் திட்டத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். ஆனால், நீட்டிப்புச் செய்வதில் சிறிய சுணக்கம் ஏற்பட்டது. சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், திமுக ஆட்சிக் காலத்தில் 25 சதவீதம் மட்டுமே பொருள்கள் வழங்கப்பட்டன.
கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் 30-இல், சிறப்பு பொது விநியோகத் திட்டத்துக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டது.
இந்தச் சுமையையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. இப்போது, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 1.53 லட்சம் லிட்டர் பாமாயில் பாக்கெட்டுகளும் வாங்கப்பட்டு விட்டன.
செங்குட்டுவன்: ஏப்ரலில் இருந்து சர்க்கரைக்கான மானியம் ரத்து செய்யப்பட உள்ளது. இதனால், உணவு மானியத்தில் இப்போதைய நிதி ஒதுக்கீட்டுடன் கூடுதலாக ரூ.2 ஆயிரத்து 500 கோடி ஒதுக்க வேண்டும். இதனால், உணவுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 8 ஆயிரம் கோடியாக இருக்க வேண்டும். ஆனால், ரூ.5 ஆயிரத்து 500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், பொது விநியோகத் திட்டத்தை எப்படி கொண்டு செல்லப் போகிறீர்கள்?
அமைச்சர் காமராஜ்: கடந்த 2012-ஆம் ஆண்டு சிறப்பு பொது விநியோகத் திட்டத்துக்கான மானியம் நிறுத்தப்பட்ட போதும், லெவி சர்க்கரை நிறுத்தப்பட்ட பிறகும், 54 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் 28 ஆயிரம் கிலோ லிட்டராகக் குறைக்கப்பட்ட போதும் அவை அனைத்தும் நியாய விலைக் கடைகள் மூலம் தடையின்றி அளிக்கப்பட்டன. எனவே, நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் பொருள்கள் எந்தக் காரணத்தை ஒட்டியும் நிறுத்தப்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com