சபாநாயகரை நீக்க கோரி ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி

சபாநாயகர் தனபாலுக்கு எதிராக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது
சபாநாயகரை நீக்க கோரி ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி

சென்னை: சட்டசபை சபாநாயகர் தனபாலுக்கு எதிராக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

தமிழக முதல்வாராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்  கொண்ட பிறகு அவரது அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த மாதம் அவையில் நடைபெற்றது. அப்பொழுது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்கட்சியினரின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.மேலும் அவையில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர், பின்னர் நடந்த  நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக அரசு வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று திமுக அப்பொழுது அறிவித்திருந்தது.அதன் அடிப்படையில் சபாநாயகர் தனபாலுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று காலை முன்மொழிந்தார்.

சபாநாயகர் பதவியிலிருந்து தனபாலை நீக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கோரப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் முதலில் நடைபெற்றது.தீர்மானத்தின் மீது எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்  பேசும் பொழுது சபாநாயகரின் பாரபட்சமான நடவடிக்கைகள் குறித்தும், விதிகளை மீறி அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது,அவைக்குள் நுழைந்து காவல்துறையினர் அத்துமீறல் உள்ளிட்ட விஷயங்களில் சபாநாயகரை குற்றம் சாட்டினார்.

பின்னர் காங்கிரஸ் சட்டமன்ற  குழுத்தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசினார். அவர் சபாநாயகர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் பேசுவதற்கு போதுமான அளவு அவகாசம் வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டிப்பேசினார்.

சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்பதால் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவைக்கு தலைமை தாங்கினார். பின்னர் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

பின்னர் ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று வாக்குகளை எண்ணிக் கணக்கெடுக்கும் பணி தற்பொழுது நடைபெற்றறது. தீர்மனத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும், எதிராக 122 வாக்குளும் பதிவு செய்யப்பட்டன. 13 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.  அதிமுக அதிருப்திஅணித்தலைவரான பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் ஸ்டாலின் கொண்டு வந்த  தீர்மானத்திற்கு ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com