ரஜினியை அவசர அவசரமாக அறிக்கை வெளியிட வைத்த தமிழிசை! பின்னணித் தகவல்கள்!

தமிழிசை தடாலடியாகப் பேட்டியளித்ததால் வேறுவழியின்றித் தன்னுடைய நிலையை தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயம்...
ரஜினியை அவசர அவசரமாக அறிக்கை வெளியிட வைத்த தமிழிசை! பின்னணித் தகவல்கள்!

வருகிற தேர்தலில் யாருக்கும் என் ஆதரவு கிடையாது.

தன்னுடைய ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் கமல் போல அல்லாமல் அரசியல் பதிவுகளைத் தவிர்த்து வரும் ரஜினி இன்று இவ்வாறு ட்வீட் செய்திருக்கிறார். பாஜக பக்கம் சாய்கிறார் என்கிறாற்போல சமீபத்தில் செய்திகள் வந்துள்ள நிலையில் இப்படியொரு நிலை எடுத்துள்ளார். கங்கை அமரனுடனான சந்திப்பு மட்டுமே இதற்கு முழுமுதற்க் காரணம் இல்லை. அதன்பின் தொடர்ந்த அரசியல் நடவடிக்கைகள் ரஜினிக்கு அலாரம் அடித்து எச்சரிக்கை செய்துள்ளது.    

தமிழகம், இமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ள 8 தொகுதிகளுக்கும், கேரள மாநிலத்தில் மக்களவைக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள மலப்புரம் தொகுதிக்கும் வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தேர்தல் குழு செயலாளர் ஜே.பி.நட்டா தில்லியில் சமீபத்தில் அறிவித்தார். இதில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி பாஜக வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்பட்டார். கங்கை அமரன் பெயரை பாஜக தலைமைக்கு தாம் பரிந்துரை செய்ததாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏப்ரல் 12 -ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டிடிவி தினகரன், மருதுகணேஷ், மதுசூதனன், பாஜக சார்பில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கங்கை அமரன் ரஜினியை சமீபத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக கங்கை அமரன்  போட்டியிடுவதற்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன. இதுதான் ரஜினிக்குத் தேவையில்லாத சிக்கல்களை உண்டாக்கிவிட்டன.

ரஜினி - கங்கை அமரன் சந்திப்புக்குப் பிறகு, ஆர்.கே. நகர் தொகுதியில் பாஜகவுக்கு ரஜினி ஆதரவளிப்பதாக செய்திகள் வெளியாகின. ஏற்கெனவே மோடிக்கு ஆதரவாக ரஜினி உள்ளார் என்கிற விமரிசனங்கள் ஒருபுறம் இருக்க, தற்போது தமிழக பிஜேபிக்கு ஆதரவான நிலையை ரஜினி எடுத்துள்ளார். அதனால்தான் வெளிப்படையாக கங்கை அமரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்கிற மாதிரியும் கருத்துகள் பரவியதால் ரஜினி ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. மேலும் ரஜினி ஆர்.கே. நகர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிரான ஒரு நிலையை எடுத்துவிட்டார் என்று அதிமுக எண்ணவும் வாய்ப்பு உருவாகும் என்பதாலும் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மேலும் தமிழ்நாடு என்பது இன்றுவரை பாஜகவுக்கு முழுமுதலாக ஆதரவளிக்காத மண். அங்கு வந்து பாஜகவுக்கு ஆதரவாகப் பேசினாலோ நிலை எடுத்தாலோ அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை ரஜினி அறியாதவரா?

பாஜகவுக்கு ஆதரவு என ரஜினி எங்குச் சொன்னார்? பாஜக வேட்பாளர் கங்கை அமரனைச் சந்தித்தது தவறா என்று கேள்வி கேட்கலாம். ரஜினியை கங்கை அமரன் சந்தித்தவுடன் உண்டான அரசியல் காய் நகர்த்தல்கள்தான் இன்றைய ட்வீட்டுக்கு முக்கிய காரணம். முக்கியமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி ஒன்று.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து தமிழிசை, தண்டையார்பேட்டையில் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆர்.கே.நகரில் பா.ஜனதாவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக-வில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. தி.மு.க. இந்த தேர்தலை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. மற்ற வேட்பாளர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்த் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். அவர் எப்போதும் தேசிய சிந்தனை கொண்டவர். நல்லவர் நல்லவர்களோடு சேர்வார்கள். பாஜக தொண்டர்களுடன் இணைந்து ரஜினி ரசிகர்களும் ஆர்.கே.நகரில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றார். இது செய்தித்தாள்களிலும் வெளியானது. இப்படித் தமிழிசை தடாலடியாகப் பேட்டியளித்ததால் வேறுவழியின்றித் தன்னுடைய நிலையை தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டது.

தமிழிசை மட்டுமா? கங்கை அமரனும் இதற்கு இன்னொரு காரணம். நேற்று செய்தியாளர்களிடம் கங்கை அமரன் பேசியபோது என்ன சொன்னார் தெரியுமா? பாஜக வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டதும் தொலைப்பேசியில் எனக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார். உங்களை சந்திக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். அதன்படி, அவரைச் சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார் என்றார். உடனே செய்தியாளர், பாஜக-வில் ரஜினி சேரவேண்டும் என்கிற கோரிக்கை அவருக்கு விடுக்கப்படுகிறது. அதுபற்றி உங்களிடம் பேசினாரா? என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கங்கை அமரன், நீங்கள் பார்ப்பது டிரெய்லர்தான். மெயின் பிக்சர் தயாராகிறது. விரைவில் நல்ல முடிவு வரும் என்றார். இதுவும் ஊடகங்களில் செய்தியாக வந்தது.

ரஜினியுடனான கங்கை அமரன் சந்திப்பை தமிழிசை, கங்கை அமரன் ஆகிய இருவரும் அரசியலாக்கியதால் வேறுவழியின்றி, ஆர்.கே. நகரில் பாஜகவுக்குத் தன்னுடைய ஆதரவு இல்லை என்பதை வேறு வார்த்தைகளில் உணர்த்தியுள்ளார் ரஜினி.  

தேர்தல் சமயங்களில் நண்பர்களாக உள்ள அரசியல்வாதிகளையும் வேட்பாளர்களையும் சந்திப்பதில் உள்ள பிரச்னை ரஜினிக்கு இப்போது புரிந்திருக்கும். கங்கை அமரன் நீண்ட கால நண்பர் என்பதால் அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்டார். பொதுவாகத் திரையுலகினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், நீண்ட கால நண்பர்கள் என பலரையும் ரஜினி தனது ஓய்வு நேரத்தில் தொடர்ந்து சந்தித்து வருகிறார். ரஜினியைச் சந்திப்பவர்கள் உடனே அத்தகவலைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள். அதேபோல ரஜினி - கங்கை அமரன் சந்திப்பு குறித்த செய்தியும் அதன் புகைப்படமும் உடனடியாகச் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டன.

சமீபகாலமாக ரஜினி எந்தக் கட்சிக்கும் தன் ஆதரவைத் தெரிவிப்பதில்லை. மாநிலத்திலும் சரி மத்தியிலும் சரி பொதுவாக ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவே நடந்துகொள்வார். முக்கியமாக கமல் போல ஆளுங்கட்சிக்கு எதிராக அவர் குரல் எழுப்புவதில்லை. இதுதான் ரஜினியின் நிலைப்பாடு. இந்நிலையில் கங்கை அமரனைச் சந்தித்த பிறகு உண்டான குழப்பங்களுக்குப் பதில் அளிக்கும் விதமாகவே தன் நிலையைத் தெளிவாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  

ஒரு வேட்பாளருக்கு வாழ்த்து சொன்னதற்கு இந்த நிலைமை! ரஜினி முழுநேர அரசியல்வாதியாகிவிட்டால் என்னென்ன நடக்கும்?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com