ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: 82 மனுக்கள் ஏற்பு: சமக வேட்பாளர் உள்ளிட்ட 45 மனுக்கள் நிராகரிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 127 மனுக்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையின்போது 45 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: 82 மனுக்கள் ஏற்பு: சமக வேட்பாளர் உள்ளிட்ட 45 மனுக்கள் நிராகரிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட 127 மனுக்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையின்போது 45 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பரிசீலனையில் 127 மனுக்கள்: மார்ச் 16-இல் தொடங்கிய வேட்பு மனுத்தாக்கல் 7 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதில் 113 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 127 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள், ஒரே வேட்பாளர் பெயரில் கூடுதல் மனுக்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் நாயர் முன்னிலையில் நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது வேட்பாளருடன் இரு நபர்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஒவ்வொரு வேட்பு மனுவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விவரங்கள் சரிபார்க்கப்பட்டன.


82 மனுக்கள் ஏற்பு-45 நிராகரிப்பு: அப்போது ஒரு வேட்பாளரின் மனு மீதான புகார்கள் தெரிவிக்க விரும்பினால் அவர்களது குற்றச்சாட்டும், வேட்பாளரின் பதிலும் அப்போதே பதிவு செய்யப்பட்டன. அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி.தினகரன் மனு மீது திமுக வேட்பாளர் மருது கணேஷ் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தினகரன் தரப்பு வழக்குரைஞர்கள் மறுப்பும் விளக்கமும் தெரிவித்தனர். பின்னர் தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர் குற்றச்சாட்டையும் அதற்கான பதிலையும் ஆய்வு செய்து இறுதியில் தினகரன் மனுவை ஏற்பதாக அறிவித்தார். அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மதுசூதனன் (அதிமுக (பு.த.அ), மருதுகணேஷ் (திமுக), கங்கை அமரன் (பாஜக), மதிவாணன் (தேமுதிக), லோகநாதன் (மார்க்சிஸ்ட்), கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர் கட்சி) ஆகியோரின் மனுக்கள் எவ்வித ஆட்சேபனையும் இன்றி ஏற்கப்பட்டன. ஆனால் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் எம்.ஏ.சேவியரின் மனு நிராகரிக்கப்பட்டது. அவர் தாக்கல் செய்த விவரங்களில் வாக்காளர் எண்ணில் தவறு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் 'என் தேசம் என் உரிமை' (ஜல்லிக்கட்டு இயக்கம்) அமைப்பு சார்பில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜெயந்தி என்பவரது மனுவும் நிராகரிக்கப்பட்டது. பரிசீலனையின் இறுதியில் 82 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 45 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர் அறிவித்தார். திங்கள்கிழமை வேட்பு மனுக்கள் வாபஸ் பெறக் கடைசி நாள்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: வேட்பாளர் சொத்து மதிப்பு அறிவிப்பு

இ.மதுசூதனன் சொத்து மதிப்பு ரூ.1.56 கோடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் இ.மதுசூதனனுக்கு ரூ. 1.56 கோடி சொத்து உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது பெயரில் வங்கிக் கணக்கில் மற்றும் ரொக்க இருப்பு ரூ.18,89,676, அசையாச் சொத்து ரூ.1.37 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர அவரது மனைவி பெயரில் உள்ள அசையும், அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ. 8.47 கோடி எனவும், 75 வயதாகும் மதுசூதனன் எஸ்.எஸ்.எல்.சி-வரை படித்திருப்பதாகவும், தொழில் விவசாயம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.2.79 லட்சம்
திமுக வேட்பாளர் என்.மருது கணேஷ் (42) தாக்கல் செய்துள்ள மனுவில், தமது வங்கிக் கணக்கு மற்றும் ரொக்க இருப்பு உள்ளிட்ட அசையும் சொத்து ரூ. 2 லட்சத்து 79,531-மட்டுமே உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.தனது மனைவியிடம் ரூ. 7 லட்சத்து 08,609 மதிப்புக்கு நகை மற்றும் ரொக்க இருப்பு உள்ளதாகவும், சொந்தமாக வீடு, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஏதும் தனது பெயரில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். பி.காம்., எல்எல்பி படித்து தற்போது வழக்குரைஞராகத் தொழில் செய்து வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தீபாவின் சொத்து மதிப்பு ரூ.3.06 கோடி, கணவருக்கு வருவாய் இல்லை
இத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா (43) தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தனது நகை, ரொக்கம், முதலீடுகள் மூலம் அசையும் சொத்து ரூ.1 கோடியே 5 லட்சத்து 96,604 எனவும், தற்போது வசிக்கும் சொந்த வீட்டின் மதிப்பு ரூ.2 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். தீபா தனது கணவருக்கு எவ்வித வருமானமும் இல்லை, வருமான வரி கணக்கு எண்ணும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கைத் துணையின் தொழில் என்ற இடத்தில் வியாபாரம் எனவும், தான் குடும்பப் பெண் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com